Russia Ukraine War: ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடை; எல்லையில் படைகள் குவிப்பு- நேட்டோ எச்சரிக்கை
ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ள நேட்டோ, உக்ரைன் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ள நேட்டோ, உக்ரைன் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக 1949-ல் அமெரிக்கா, நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பை (North Atlantic Treaty Organization - NATO) உருவாக்கியது. இதில், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், கனடா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்தன. நேட்டோவில் இணைந்துள்ள நாடுகளின்மீது பிற அந்நிய நாடுகள் படையெடுத்தால், சக உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு உறுதுணையாக, ராணுவப் படையெடுப்பை மேற்கொள்ளும். இந்த பாதுகாப்பு அம்சத்தால், நேட்டோ உருவாக்கப்பட்டபோது 12 ஆக இருந்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது நேட்டோ அமைப்பில் 30 உறுப்பு நாடுகள் உள்ளன.
நேட்டோவில் ரஷ்ய எல்லை நாடுகளான போஸ்னியா, ஹெர்ஸ்கோவினா, ஜார்ஜியா மற்றும் உக்ரைன் ஆகியவையும் இணைய ஆர்வமாக இருந்தன. இதற்கு நேட்டோவும் இசைந்தது. எனினும் இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. நேட்டோ தன்னுடைய படைகளை ரஷ்ய எல்லைகளில் இருந்து திரும்பப் பெற வேண்டும். நேட்டோ அமைப்பில் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் இணையக் கூடாது என்று போருக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதற்கு அமெரிக்கா செவிசாய்க்காததை அடுத்து, இன்று போர் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் ரஷ்யாவின் ராணுவத் தாக்குதலுக்கு ஆளான உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் உதவி கோரியது. எனினும் படைகளை அனுப்ப முடியாது என்று நேட்டோ தெரிவித்துள்ளது. எனினும் நேட்டோ எல்லையில் உள்ள உறுப்பு நாடுகளிலும் கிழக்கு எல்லைகளிலும் நேட்டோ படைகளை அதிகரித்து வருவதாக அதன் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''உக்ரைனின் இறையாண்மையை நேட்டோ மதிக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட பொறுப்பற்ற படையெடுப்பை அடுத்து, நேட்டோ உறுப்பினர் நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அதேபோல உலகம் முழுவதும் உள்ள நேட்டோ ஆதரவு நாடுகள், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
ஏற்கெனவே நேட்டோ நீண்ட காலமாக உக்ரைனுக்கு ராணுவ ஆதரவை வழங்கி வருகிறது. 2014-ல் இருந்த சூழலைக் காட்டிலும் சிறப்பாக, வலிமையாக, பயிற்சி பெற்ற படைகளைக் கொண்ட நாடாக உக்ரைன் மாற நேட்டோ உதவி இருக்கிறது.
இந்த சூழலில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். சர்வதேச விதிகளின் கொடூர மீறலை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எங்களின் நட்பு நாடுகள் தெரிவித்துள்ளன.
தேவைப்படும்போது படைகளைப் பயன்படுத்தும் அதிகாரத்தை எங்களின் ராணுவத் தலைவர்களுக்கு அளிக்கும் திட்டத்தை நேட்டோ செயல்படுத்தி உள்ளது. உக்ரைனில் இதுவரை எந்த ஒரு நேட்டோ படையும் இல்லை. எனினும் நேட்டோ எல்லையில் உள்ள உறுப்பு நாடுகளிலும் கிழக்கு எல்லைகளிலும் நேட்டோ படைகளை அதிகரித்து வருகிறோம்''.
இவ்வாறு நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் தெரிவித்துள்ளார்.