"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
ரஷியா அனைத்து திசைகளிலும் இந்தியாவுடன் உறவை வளர்த்து வருகிறது என ரஷிய அதிபர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம்பிடிக்க இந்தியாவுக்கு தகுதி இருக்கிறது என ரஷிய அதிபர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய, ரஷிய நாடுகளுக்கிடையே பல காலமாக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி தொடங்கி மோடி காலம் வரையில், இந்தியாவின் நட்பு நாடாக ரஷியா இருந்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்காவுடனான உறவு அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டபோதிலும், ரஷியாவுடன் நட்பு பாராட்டி வருகிறோம்.
இந்திய - ரஷிய உறவு:
குறிப்பாக, உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்த நிலைபாடு இரு நாட்டு உறவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. உக்ரைனுக்கு எதிராக படையெடுத்த ரஷியாவை கண்டிக்கும் விதமாக ஐநா அரங்கில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியிலும் ரஷியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்காமல் இந்தியா நடுநிலை வகித்தது. அதேபோல, ரஷியாவுக்கு எதிராக மேற்குவலக நாடுகள் பல விதமான பொருளாதார தடை விதித்தபோதிலும், ரஷியாவுடன் இந்தியா தொடர் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரத்தில், இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் பலன் அளிக்கவில்லை. ரஷியாவுடன் சுமூகமான உறவை பேணி வரும் இந்தியா குறித்து ரஷிய அதிபர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.
புதின் என்ன பேசினார்?
ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்தியா குறித்து அவர் பேசுகையில், "ரஷியா அனைத்து திசைகளிலும் இந்தியாவுடன் உறவுகளை வளர்த்து வருகிறது. இருதரப்பு உறவுகளில் அதிக நம்பிக்கை உள்ளது.
இந்தியாவை வல்லரசுகளின் பட்டியலில் சந்தேகத்திற்கு இடமின்றி சேர்க்க வேண்டும். உலக நாடுகளில் அதிவேக வளர்ச்சி, பண்டைய கலாச்சாரம், மேலும் வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள், 100 மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
நமது உறவுகள் எங்கு, எந்த வேகத்தில் வளரும் என்பது பற்றிய நமது பார்வை இன்றைய யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டது. நமது ஒத்துழைப்பின் அளவு ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு அதிகரித்து வருகிறது.
இந்திய ஆயுதப் படைகளுடன் எத்தனை வகையான ரஷிய ராணுவ உபகரணங்கள் உள்ளன என்பதைப் பாருங்கள். இந்த உறவில் ஒரு பெரிய அளவு நம்பிக்கை உள்ளது. நாங்கள் எங்கள் ஆயுதங்களை இந்தியாவுக்கு மட்டும் விற்கவில்லை. நாங்கள் அவற்றை ஒன்றாக வடிவமைக்கிறோம்" என்றார்.