அமெரிக்கா: ஹெட்செட்டால் உயிர்தப்பிய இளைஞர்… கலிபோர்னியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் வைரல்!
நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்ட ஹெட்ஃபோன்கள் என்பதால் பிழைத்துக் கொண்டேன். இல்லையென்றால், நான் 18 வயதில் இறந்ததாக இந்த உலகம் செய்தி அறிந்திருக்கும்.
அதிர்ஷ்டம் பாய் போட்டு படுத்திருக்கிறது என்று நம்மூரில் நக்கலாக கூறுவார்கள். அதே போல ஒரு இளைஞரின் உயிரை காக்க அதிர்ஷ்டம் உண்மையாகவே மெத்தை போட்டு படுத்திருந்திருக்கிறது. புல் தடுக்கி விழுந்து இறந்தவர் என்றும், புலி கடித்து பிழைத்தவர் உண்டு என்றும் பல நாளும் பல செய்திகள் நம் கண்முன்னே வந்து செல்கின்றன. காதில் ஹெட்ஃபோன் மாட்டி இருந்ததால் உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது. ஹெட்ஃபோன் தனது ஹெட்டை காத்ததாக அவர் வெளியிட்ட போஸ்ட் வைரல் ஆகி உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்ததாக Enough_Dance_956 என்ற பெயருடைய ரெட்டிட் கணக்கு வைத்திருக்கும் இளைஞர் ஒருவர் பதிவிட்டுள்ளார். படுக்கை அறை ஜன்னல் வழியாக வந்த தோட்டாவை ஹெட்போன் தடுத்து எனது உயிரை காப்பாற்றியது என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த பதிவில், "இந்த பதிவை பார்க்கும் அனைவருக்கும் வணக்கம். Razer நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கு மனதார நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். காலை 10:30 மணியளவில், படுக்கையறை ஜன்னல் வழியாக வந்த தோட்டா, என் தலையில் வைத்திருந்த ரேசர் ஹெட்போனைத் தாக்கியது. நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்ட ஹெட்ஃபோன்கள் என்பதால் பிழைத்துக் கொண்டேன். இல்லையென்றால், நான் 18 வயதில் இறந்ததாக இந்த உலகம் செய்தி அறிந்திருக்கும். எனது பிரிவால் குடும்பத்தினரும், நண்பர்களும் படும் வேதனையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அந்த தோட்டா எதோ தொலைவில் உள்ள கட்டடத்தில் இருந்து வந்தது. அது தவறான பாதையில் பயணித்து வந்தது என்பதை நான் உணர்வேன். எனினும், என் நண்பர்களுடன் உரையாடி கொண்டு இருக்கையில் என் உயிர் பிரிந்திருக்கும்." என்று எழுதி இருந்தார்.
மேலும், "நல்ல வேளையாக என் தலையில், Razer Kraken ஹெட்போன் இருந்தது. தோட்டா என் ஜன்னல் வழியாக வந்து ஹெட்செட்டில் பட்டு தெறித்து திசை திரும்பியது. மோதிய வேகத்தில் தெறித்த தோட்டா சுவற்றில் இடித்து, பின்னர் என் படுக்கையில் வந்து விழுந்தது. இதனை கண்ட நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். காவல் துறையினர் வந்து தோட்டாவை கைப்பற்றி சென்றனர்," என்று இளைஞர் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு பதிலளித்த ரேசர் நிறுவனம் அவருக்கு அதே மாடல் ஹெட்செட் ஒன்று புதிதாக தருவதாக அறிவித்து மேலும் குஷிப்படுத்தி உள்ளது. இவரது ரெட்டிட் பதிவு வைரலாகி பலரை ஆச்சர்ய படுத்தி இருந்தது. அதுமட்டும் இன்றி அவருக்கு அதே மாதிரியான இன்னொரு ஹெட்செட்டை நிறுவனம் வழங்குவதாக பதில் அளித்திருப்பதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.