Putin Excrement Collected : ரஷ்ய அதிபரின் மலக்கழிவுகளை சேகரிக்கும் பாதுகாவலர்கள்...இதுதான் காரணமாம்...வெளியான திடுக்கிடும் தகவல்..
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்தே அவரின் உடல் நலன் குறித்து பல வதந்திகள் பரவிவருகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பாதுகாவலர்கள், அவரின் கழிவுகளையும் சிறுநீரையும் சேகரித்து அப்புறப்படுத்திவருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
புதினின் கழிவுகள் தவறான நபர்களிடம் கிடைத்துவிட்டால் அவரின் உடல் நலன் குறித்து தேவையற்ற தகவல்கள் வெளியே கசிந்து விடும் என்பதால் அவரின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முதன்முதலாக இந்த தகவல் பிரஞ்சு இதழான பாரிஸ் மேட்சில்தான் வெளியாகியுள்ளது. இரண்டு புலனாய்வு பத்திரிகையாளர்கள் இதனை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, பல செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் கோட்பாடு மற்றும் வியூக ஆலோசனையின் தலைவர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு உளவுத்துறை அதிகாரி ரெபெக்கா கோஃப்லர் பேசுகையில், "புதின் தனது உடல்நிலை குறித்த எந்தத் தகவலும் வெளிநாட்டு உளவுத்துறையின் கைகளில் கிடைக்க வாய்ப்புள்ளது என்று அஞ்சுகிறார்.
அதிகார மாற்றத்துடன் தொடர்புடைய எந்தவொரு குழப்பத்தையும் தடுத்து, ரஷ்யாவை காலவரையின்றி ஆட்சி செய்கிறார் என்ற பிம்பத்தை அவர் முன்வைக்க விரும்புகிறார்" என்றார்.
புதின் வெளிநாடு செல்லும் போதெல்லாம் ரஷிய கூட்டாட்சி பாதுகாப்பு சேவையின் சிறப்பு அதிகாரி தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்து சென்று அதில் புதினின் கழிவுகளை சேகரித்து வைத்து கொண்டு மாஸ்கோவுக்கு திருப்பி அனுப்புவார் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இன்டிபென்டன்ட் செய்தி நிறுவனம் வெளியிட்ட கட்டுரையில், "புதனின் உடற் கழிவுகள் பிரத்யேக பாக்கெட்டுகளில் சேகரிக்கப்படுகின்றன. பின்னர், பிரீஃப்கேஸில் வைக்கப்பட்டு மாஸ்கோவுக்கு அனுப்பப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யா குறித்து கடந்த 10 ஆண்டுகளாக செய்தி சேகரித்து வரும் ரெஜிஸ் ஜென்டே, அந்நாடு பற்றி இரண்டு புத்தகங்களை எழுதியுள்ள மிகைல் ரூபின் ஆகியோரிடம் இன்டிபென்டன்ட் செய்தி நிறுவனம் பேட்டி எடுத்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு, மே 29ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றபோதும் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சவுதி அரெபியாவும் சென்றபோதும் புதினின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மாஸ்கோவுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ரஷ்யாவின் தலைமை பொறுப்புக்கு புதின் வந்ததிலிருந்து, இந்த செயலை அவர் பின்பற்றிவருவதாக கூறப்படுகிறது.
புதினின் உடல் நலம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் உலகம் முழுவதும் ஆவல் இருந்திருக்கிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்தே அவரின் உடல் நலன் குறித்து பல வதந்திகள் பரவிவருகிறது. புதினுக்கு ரத்த புற்று நோய் இருப்பதாக ரஷிய தலைமைக்கு நெருக்கமான தலைவர் கடந்த மாதம் திடுக்கிடும் தகவலை பகிர்ந்திருந்தார். இருப்பினும், ரஷ்ய அதிகாரிகள் அனைத்து ஊகங்களையும் மறுத்துள்ளனர்.