Nepal PM: நேபாள நாட்டிற்கு புதிய பிரதமர்...! 3வது முறையாக நாளை பதவியேற்பு..!
நேபாளத்தின் நாட்டின் புதிய பிரதமராக பிரசாந்தா மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார்.
நேபாள புதிய பிரதமர்:
நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட் மய்யம்) தலைவர் புஷ்பா கமல் தஹல் பிரசாந்தா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமரை அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி நியமித்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நேபாள குடியரசு தலைவர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "அரசியலமைப்பு 76ஆவது பிரிவு 2ஆவது உட்பிரிவின் படி நேபாளத்தின் பிரதமராக பிரசண்டா நியமிக்கப்பட்டுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளின் ஆதரவை பெறும் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர், நேபாள அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமர் பதவிக்கு உரிமை கோரலாம். அதன்படி, இன்று மாலை 5 மணிக்குள் உரிமை கோர அவகாசம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, பிரதமர் பதவிக்கு பிரசண்டா உரிமை கோரினார்.
சி.பி.என். - யு.எம்.எல்.
சிபிஎன்-யுஎம்எல் தலைவர் கேபி சர்மா ஒலி, ராஷ்டிரிய சுதந்திரக் கட்சி (ஆர்எஸ்பி) தலைவர் ரவி லாமிச்சானே, ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சித் தலைவர் ராஜேந்திர லிங்டன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், புதிய பிரதமராக தஹலை நியமிப்பதற்கான ஆதரவு கடிதத்துடன் அதிபர் அலுவலகத்திற்கு சென்றிருந்தனர் எனக் கூறப்படுகிறது.
275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில் சிபிஎன்-யுஎம்எல் கட்சிக்கு 78 உறுப்பினர்கள் இருக்கின்றனர். சிபிஎன்-எம்சி கட்சிக்கு 32 உறுப்பினர்களும் ஆர்எஸ்பி கட்சிக்கு 20 உறுப்பினர்களும் ஆர்பிபி கட்சிக்கு 14 உறுப்பினர்களும் ஜேஎஸ்பி கட்சிக்கு 12 உறுப்பினர்களும் ஜனமத் கட்சிக்கு 6 உறுப்பினர்களும் நகரிக் உன்முக்தி கட்சிக்கு 3 உறுப்பினர்களும் உள்ளனர்.
3வது பிரதமர்:
நேபாளத்தின் பிரதமராக பிரசண்டா பதவியேற்பது இது மூன்றாவது முறை. டிசம்பர் 11, 1954 அன்று போக்ராவுக்கு அருகிலுள்ள காஸ்கி மாவட்டத்தில் உள்ள திகுர்போகாரியில் பிறந்த பிரசண்டா, கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
சிபிஎன்-மாவோயிஸ்ட் கட்சி அமைதி வழி அரசியலை ஏற்றுக்கொண்டபோது, பத்தாண்டு கால ஆயுதமேந்திய கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவந்தபோது அவர் பிரதான அரசியலில் நுழைந்தார்.
பிரசாந்தா:
1996 முதல் 2006 வரையிலான 10 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை அவர் வழிநடத்தினார். இறுதியில் நவம்பர் 2006 இல் விரிவான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கிளர்ச்சியை கைவிட்டு ஜனநாயக வழியை தேர்வு செய்தார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் ஒலியின் இல்லத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அங்கு சிபிஎன்-மாவோயிஸ்ட் மய்யம் மற்றும் பிற சிறிய கட்சிகள் பிரசாந்தா தலைமையில் அரசாங்கத்தை அமைக்க ஒப்புக்கொண்டன. சுழற்சி முறையில் அரசாங்கத்தை வழிநடத்த பிரசாந்தாவுக்கும் ஒலிக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், பிரசாந்தாவின் கோரிக்கையை ஏற்று அவரின் கோரிக்கையின்படி பிரதமர் பதவி பிரசாந்தாவுக்கு வழங்கப்பட்டது.