Pope Francis: நூறாண்டுகளில் முதல்முறை..! போப் இறப்பிற்கான காரணம்? அடக்கம் எங்கே? இறுதிச்சடங்கு எப்போது?
Pope Francis: உலக கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸின் மறைவிற்கான காரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

Pope Francis: வாட்டிகன் சிட்டிக்கு வெளியே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என, போப் பிரான்சிஸ் விருப்பம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
போப் பிரான்சிஸ் மறைவிற்கான காரணம்:
ஈஸ்டர் திங்கட்கிழமையன்று காலமான போப் ஃப்ரான்சிஸ், பக்கவாதத்தாலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மீளமுடியாத இதய செயலிழப்பு காரணமாகவும் இறந்ததாக வாட்டிகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது 88 வயதான போப் ஆண்டவரின் இறப்புச் சான்றிதழில், திங்கட்கிழமை காலை இறப்பதற்கு முன்பு போப் கோமாவில் மூழ்கியதாக கூறப்பட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. ஃப்ரான்சிஸ் "பெருமூளை பக்கவாதம், கோமா, மீளமுடியாத இருதய சுற்றோட்டக் கோளாறு காரணமாக, உள்ளூர் நேரப்படி காலை 7:35 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 11:05 மணிக்கு) வாட்டிகனில் உள்ள சாண்டா மார்டா இல்லத்தில் அவரது குடியிருப்பில் இறந்தார்” இறந்தார் என்று வாட்டிகன் மருத்துவர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி இறப்புச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் அஞ்சலி:
போப்பின் மரணத்தைத் தொடர்ந்து, வாட்டிகன் நகரத்தின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஜெபமாலை பிரார்த்தனைக்காக ஏராளமானோர் திரண்டனர். மேலும் போப்பிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலகம் முழுவதும் பல பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ட்ரம்ப் இரங்கல் தெரிவித்ததோடு, தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
போப்பின் உடல் எங்கு அடக்கம்?
தனது இறுதி சாசனத்தில், முதல் லத்தீன் அமெரிக்க போப்பாண்டவரான ஃப்ரான்சிஸ், வாட்டிகனுக்கு வெளியே, ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்காவில், "குறிப்பிட்ட அலங்காரம் இல்லாமல்" தனது உடலை அடக்கம் செய்ய அறிவுறுத்தியதாக பிபிசி தெரிவித்துள்ளது. மேலும், அடக்கம் செய்யப்படும் இடத்தில் தனது போப்பாண்டவரின் பெயரான 'ஃபிரான்சிசஸ்' லத்தீன் மொழியில் பொறிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம், நூற்றாண்டுக்கு பிறகு வாட்டிகன் நகரத்திலிருந்து வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப்பாண்டவர் என்ற பெருமையைப் பெறுவார். வாட்டிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் பல போப்பாண்டவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இறுதிச்சடங்கு எப்போது?
போப் விட்டுச் செல்லும் அறிவுறுத்தல்களின்படி இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்வது கமேர்லெங்கோவின் பணியாகும். இரண்டாம் ஜான் பால் இறந்த ஆறு நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 8 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவை, புனித கார்டினல்கள் கல்லூரியின் டீன், கார்டினல் ஜோசப் ராட்ஸிங்கர், சுமார் 164 கார்டினல்களின் உதவியுடன் நடத்தினார். சுமார் 2 மில்லியன் மக்கள் ஆன்லைனில் பார்த்தனர். மேலும் நேரில் கலந்து கொண்ட பிரமுகர்களின் நீண்ட பட்டியலில் நான்கு மன்னர்கள், ஐந்து ராணிகள் மற்றும் குறைந்தது 70 அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அடங்குவர். அதன்படி, பல்வேறு நாடுகளில் உள்ள கார்டினல்கள் வாட்டிகன் நகரத்தை அடைந்த பிறகும் போப் ஃப்ரான்சிஸ் உடலுக்கான இறுதிச்சடங்கு விவரங்கள் உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.





















