Russia Vs NATO: போலந்திற்குள் புகுந்த ரஷ்ய ட்ரோன்கள்; நடவடிக்கை எடுக்குமா நேட்டோ.? - விரிவடையும் உக்ரைன் போர்?
உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்திவரும் நிலையில், போலந்திற்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இதனால், உக்ரைன் போர் விரிவடையுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திவரும் ரஷ்யா, இன்றும் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் சில ட்ரோன்கள் போலந்து பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்ததால், அவற்றை போலந்து ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. மேலும், உக்ரைன் மற்றும் அதன் நெருங்கிய நட்பு நாடான போலந்து ஆகியவை, ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்குமாறு நேட்டோ-வை வலியுறுத்தியுள்ளன. இதனால், ஐரோப்பிய நாடுகளிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக தொடரும் ரஷ்யா-உக்ரைன் போர்
உக்ரைன் நேட்டோவுடன் இணைய விரும்பியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. இந்த போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா இந்த போரை முன்னெடுத்து வருகிறது.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும், குறிப்பாக அமெரிக்கா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைக்கென பிரத்யேக தூதரை நியமித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொடர்ந்து பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகிறர். சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின், ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்துப் பேசினார்.
ஆனாலும், போர் நிறுத்தம் குறித்து எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, மறுபுறம் உக்ரைனை போட்டுத் தாக்கி வருகிறார் புதின். அதன் ஒரு பகுதியாகத் தான் இன்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
போலந்திற்குள் ஊடுருவிய ரஷ்ய ட்ரோன்கள் - நேட்டோ நடவடிக்கை பாயுமா.?
உக்ரைன் மீதான தாக்குதலுக்காக ஏவப்பட்ட ரஷ்ய ட்ரோன்கள், அண்டை நாடான போலந்திற்குள் ஊடுருவியுள்ளன. இதை கண்ட போலந்து நாட்டின் ராணுவம், அவற்றை உடனடியாக சுட்டு வீழ்த்தியுள்ளது. போலந்து ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு ஒரு நாடு. அதிலும், நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இம்பெற்றுள்ள ஒரு முக்கிய உறுப்பினராக உள்ளது போலந்து.
பொதுவாக, நேட்டோ கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள எந்த ஒரு நாட்டிற்கும் எதிரான தாக்குதல் அல்லது போர், ஒட்டுமொத்த கூட்டமைப்பிற்கும் எதிரானதாக கருதப்படும். இதனால், அந்த நாட்டிற்கு ஆதரவாக அனைத்து நேட்டோ நாடுகளும் போரில் களமிறங்க வேண்டும் என்பதுதான் அந்த கூட்டமைப்பின் விதி.
அதன்படி பார்த்தால், தற்போது போலந்திற்குள் ரஷ்ய ட்ரோன்கள் ஊடுருவியதால், இந்த விவகாரத்தில் நேட்டோ தலையிட வேண்டும். உக்ரைன் மீதான தாக்குதலின்போது, பல முறை இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்துள்ளதாகவும் போலந்து கூறியுள்ளது. ஒருவேளை ரஷ்யா போலந்தை குறி வைத்தால், நடப்பதே வேறு. ஆம், போலந்திற்கு ஆதரவாக நேட்டோ படைகள் களமிறங்கும். அப்படி ஒரு சூழல் உருவானால், அது மிகப்பெரிய போராக உருவெடுக்கும்.
இதனாலேயே, தற்போது உக்ரைன் மற்றும் போலந்து நாடுகள், ரஷ்யா மீது நேட்டோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளன. நேட்டோவை எப்படியாவது தங்களுக்கு ஆதரவாக இழுக்க வேண்டும் என்று தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆரம்பத்திலிருந்தே முயற்சித்து வருகிறார்.
ஆனால் நேட்டோ பிடி கொடுக்காமலேயே இருந்துவந்தது. தற்போது இந்த ஊடுருவலை சாக்காக வைத்து, நேட்டோவை இந்த போருக்குள் களமறக்கலாம் என ஜெலன்ஸ்கி முயல்கிறார். நேட்டோ என்ன செய்யப் போகிறது.? பொறுத்திருந்து பார்ப்போம்.





















