Modi in Ghana: கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
கானா நாட்டிற்கு சென்றடைந்த மோடிக்கு அந்நாட்டு முறைப்படி அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் திரண்ட இந்தியர்கள் ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்றனர்.

பிரதமர் மோடி, கானா, ட்ரினிடாட் & டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் முதற்கட்டமாக, நேற்று தனி விமானத்தில் கானா புறப்பட்டுச் சென்ற அவருக்கு, கானாவில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதை
அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி கானா நாட்டிற்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில், மோடியை அந்நாட்டு அதிபர் மஹாமா வரவேற்றார். அங்கு, இந்திய பிரதமரை கவுரவிக்கும் விதமாக, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, ராணுவ அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உற்சாகத்துடன் ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
கடந்த 30 வருடங்களில், கானா நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மோடி. அவரை பார்க்க கானாவில் வசிக்கும் இந்தியர்கள் உற்சாகமாக திரண்டனர்.
மோடியின் பெயரை ஆரவாரமாக கோஷமிட்டு அவரை வரவேற்ற இந்தியர்களை நோக்கி கையசைத்து, வரவேற்பை ஏற்றுக் கொண்டார் மோடி. தொர்ந்து, ‘ஹரே கிருஷ்ணா‘ பாடலையும் பாடி பிரமரை அவர்கள் வரவேற்றனர்.
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது
பின்னர் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருதான ஆபிஸ் ஆட் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கானா அதிபர் ஜான் தர்மனி மஹாமா விருதை வழங்க, பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.

இருநாட்டு உறவுகள், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஆலோசனை
கானாவில் 2 நாட்கள் பயணத்தின்போது, வரலாற்று தன்மை கொண்ட உறவுகளை ஆழப்படுத்தும் விதமாக, இரு நாட்டு தலைவர்களும் தங்கள் பார்வைகளை பரிமாறிக் கொள்வார்கள் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதலீடுகள், சுகாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு, திறன் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
இன்று கானாவில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி, அங்கிருந்து டிரினிடாட் & டுபாகோ நாட்டிற்கு 2 நாட்கள் பயணமாக செல்கிறார். அந்நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அவரை உரையாற்ற உள்ளார்.
பின்னர் ஜூலை 5-ம் தேதி பிரேசிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, 17-வது ப்ரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். அப்போது, பல்வேறு நட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இறுதியாக, நமீபியாவிற்கு செல்லும் பிரதமர் மோடி, ஜூலை 9-ம் தேதி நாடு திரும்புகிறார்.
முன்னதாக இந்த பயணம் குறித்து பதிவிட்ட பிரதமர் மோடி, அடுத்த சில நாட்களில், கானா, டிரினிடாட் அண்ட் டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியாவிற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், உலகத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த ஆவலுடன் காத்திருப்பதாகவும், பிரேசிலில் நடைபெறும் ப்ரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன் என்றும் கூறியிருந்தார். நமீபியா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது ஒரு மரியாதையாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.






















