Imran Khan Rally Firing: இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு.. வாசிம் அக்ரம், பாபர் அசாம் கண்டனம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம், முன்னாள் பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர், பிரபல பேட்ஸ்மேன் முகம்மது ஹஃபீஸ் ஆகியோர் இம்ரான் கான் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.
70 வயது நிரம்பியவரும் பிடிஐ கட்சியைச் சேர்ந்தவருமான இம்ரான் கான் அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக, இஸ்லாமாபாத்தை நோக்கி இன்று (அக்.03) பேரணி மேற்கொண்டிருந்தார்.
அப்போது இம்ரான் கான் சென்ற கண்டெய்னர் வாகனத்துக்கு அருகில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து விரைந்து இம்ரான் கானின் காவலர்கள் அவரை பாதுகாப்பு வளைத்துக்குள் கொண்டுவந்தனர்.
இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரரும், இம்ரான் கானின் நீண்டகால டீம் மேட்டுமான வாசிம் அக்ரம் இந்நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
“வஜிராபாத்தில் இருந்து வெளிவரும் நிகழ்வுகள் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இம்ரான் பாய் மற்றும் அங்குள்ள அனைவருக்கும் எனது பிரார்த்தனைகள். ஒரு நாடாக நாம் ஒன்றுபட வேண்டும், நமது தேசிய ஒற்றுமையை சிதைக்க யாரையும் நாம் அனுமதிக்கக் கூடாது” என வாசிம் அக்ர்ம் ட்வீட் செய்துள்ளார்.
Deeply disturbed about the events unfolding in Wazirabad . Our prayers with Imran BHAI and everyone there. We as a country must come together and not allow anyone to distort our national unity.
— Wasim Akram (@wasimakramlive) November 3, 2022
மேலும், தற்போதைய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், பிரபல பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர், பிரபல பேட்ஸ்மேன் முகம்மது ஹஃபீஸ் ஆகியோரும் இந்நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்தும், இம்ரான் கான் விரைந்து நலம் பெற வேண்டியும் ட்வீட் செய்துள்ளனர்.
Strongly condemn this heinous attack on @ImranKhanPTI. May Allah keep Kaptaan safe and protect our beloved Pakistan, Ameen.
— Babar Azam (@babarazam258) November 3, 2022
குஜ்ரன்வாலாவில் உள்ள அல்லா வாலா சவுக்கில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற நிலையில், இம்ரான் கான் உள்ளிட்ட அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரது பெயர் நவீத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முன்னதாக இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், அதனால் தான் அவரைக் கொலை செய்ய வந்ததாகவும் அந்நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.