Pakistan Bomb Blast: பயங்கரம்.. பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு - 52 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
பாகிஸ்தானில் மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தது அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்களும், குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடைபெற்று வருவது அந்த நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள முக்கிய பகுதி பலூசிஸ்தான். இங்கு மஸ்டங் என்ற பகுதி உள்ளது.
குண்டுவெடிப்பு:
இந்த பகுதியில் பிரபல மசூதி ஒன்று அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமைதோறும் இஸ்லாமியர்கள் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்வதை தங்களது மதக்கடமைகளில் ஒன்றாக கடைபிடித்து வருகிறார்கள். இந்த சூழலில், இன்றும் மஸ்டங்கில் உள்ள அந்த மசூதிக்கு ஏராளமானோர் தொழுகைக்கு சென்றனர். இதனால், மசூதிக்கு வெளியேயும் வழக்கத்தை விட மக்கள்தொகை அதிகமாக காணப்பட்டது.
#Pakistan At least four people were died and more than 50 others were wounded in an explosion near a masjid in #Mastung area of #Balochistan during the main procession of Eid Milad-ul-Nabi. pic.twitter.com/eipuYn4HVW
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) September 29, 2023
இந்த நிலையில், திடீரென மசூதி அருகே குண்டுவெடித்தது. இதில், 52க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும், தற்கொலைப் படை தாக்குதலினால் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேற்றப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
போலீஸ் டி.எஸ்.பி. மரணம்:
இந்த கொடூர சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த சம்பவத்தில், மஸ்டங் நகர துணை போலீஸ் கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்துள்ளார். சம்பவம் அறிந்த பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயம் அடைந்த குழந்தைகள் ரத்தக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் பார்ப்பவர்களின் நெஞ்சங்களை கலங்க வைக்கிறது.
2வது சம்பவம்:
இதுதொடர்பாக, அமைச்சர் ஜேன் அசாக்ஷாய் கூறியதாவது, எதிரிகள் பலுசிஸ்தானில் மதச்சகிப்புத்தன்மையை அழித்து அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தாங்க முடியாதது என்றார். பாகிஸ்தான் நாட்டில் ஏற்கனவே அரசியல் சூழல் சரியில்லாத சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம் அன்வர் உல் ஹக் பிரதமராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பிறகு செப்டம்பர் மாதம் நடைபெறும் 2வது பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும். இந்த சூழலில், தற்போது நடைபெற்றுள்ள குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பதற்றத்தை அந்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: ABP EXCLUSIVE: இந்திய - சீன நாடுகளுக்கிடையே பாலமாக இருக்க விரும்புகிறோம்: நாடு கடந்த திபெத்திய அதிபர் நம்பிக்கை
மேலும் படிக்க: Watch Video: பிறந்தநாள் பார்ட்டிக்குள் புகுந்த கரடி.. அரண்டுபோன மக்கள்..உற்சாகமாய் தின்ற கரடி.. இணையத்தில் வைரல்..