Will Smith Wife : ஆஸ்கர் விழாவில் உருவகேலிக்கு ஆளான வில் ஸ்மித் மனைவி.. அலோபீஷியா குறைபாடு என்றால் என்ன?
தன்னுடைய தலையில் முடி இல்லாததால் ஆஸ்கர் விருது விழாவில் பிரபல நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி உருவகேலிக்கு ஆளான சம்பவம் வைரலாகி வருகிறது.
தன்னுடைய தலையில் முடி இல்லாததால் ஆஸ்கர் விருது விழாவில் பிரபல நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி உருவகேலிக்கு ஆளான சம்பவம் வைரலாகி வருகிறது. அவர் என்ன குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்? பார்க்கலாம்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முதல்முறையாக ஆஸ்கர் விருதைப் பெற்றார்.
இந்த விருது விழாவை நகைச்சுவை நடிகரும் தொகுப்பாளருமான க்றிஸ் ராக் தொகுத்து வழங்கினார். முன்னதாக விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்க்கெட் ஸ்மித் (Jada Pinkett) குறித்து உருவ கேலி செய்யும் வகையில், க்றிஸ் ராக் கிண்டலாகப் பேசினார். இதை ஜடா ஸ்மித் சங்கடத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்.
இதனால் காட்டமான நடிகர் வில் ஸ்மித், உடனடியாக மேடையேறிச் சென்று க்றிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். "என் மனைவி பற்றி உன்னுடைய வாயில் இருந்து இனி வார்த்தைகள் வரக்கூடாது" என்று கோபமாகத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து உருக்கத்துடன் பேசி விருதைப் பெற்றுக்கொண்ட ஸ்மித், ஆஸ்கர் குழுவிடம் மன்னிப்பும் கேட்டார். நடிகர் வில் ஸ்மித், க்றிஸ் ராக்கை அறையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
உருவ கேலிக்கு என்ன காரணம்?
ஜடா பிங்க்கெட்டின் தலையில் முடி இல்லாதது பற்றியே க்றிஸ் ராக் பேசியிருந்தார். ஆலோபீசியா (alopecia) என்னும் நோயினால் அவதிப்பட்டு வருகிறார் ஜடா பிங்க்கெட் ஸ்மித். இதனால் அவர் தலையில் உள்ள முடி கொட்டத் தொடங்கியது. இதுகுறித்துப் பொதுவெளியில் முதல்முறையாக 2018-ம் ஆண்டு அறிவித்தார் ஜடா ஸ்மித்.
இதைத் தொடர்ந்து முடியை முழுவதுமாக மழித்து, மொட்டையும் அடித்துக்கொண்டார். அப்போது, 'எனக்கு ஆலோபீசியா என்று கண்டுபிடிக்கப்பட்டபோது, அதைக் கையாள்வது மிகவும் பயங்கரமாக இருந்தது' என்று ஜடா ஸ்மித் தெரிவித்திருந்தார். அந்தக் குறைபாட்டால் ஏற்பட்ட பாதிப்பால், ஜடா தற்போது உருவ கேலிக்கு ஆளாகி உள்ளார்.
ஆலோபீசியா என்றால் என்ன?
அமெரிக்க சுகாதாரத்துறை அறிக்கைப்படி, ஆலோபீசியா என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி முடி கொட்டுதலை ஏற்படுத்தும் குறைபாடு ஆகும். இந்த நிலையால், பாதிக்கப்பட்டவரின் தலைமுடி, கண் புருவ முடி மற்றும் இமையில் உள்ள முடி முழுவதுமாகக் கொட்டிவிடும்.
ஆரம்பத்தில் முடி கொட்டுதல் சிறிய அளவில், வட்ட வடிவிலான திட்டுகளாகத் தொடங்கும். பின்பு மெல்ல அதிகரிக்கும். சிலருக்குக் கடுமையாக முடி கொட்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமாகவே இருக்கின்றனர். முடி இழப்பைத் தவிர வேறு அறிகுறிகள் எதுவும் அவர்களுக்கு இருப்பதில்லை.
இந்த நிலையை அதன் பாதிப்பைப் பொறுத்து 3 வகையாகப் பிரிக்கலாம்.
Patchy
பெரும்பாலும் இந்த வகையே மக்களைத் தாக்குகிறது. இந்த வகையில் ஒன்று அல்லது பல நாணய அளவிலான திட்டுகள் தலையிலோ அல்லது உடலின் பிற பகுதிகளிலோ ஏற்படுகின்றன.
Totalis
இந்த வகையால் பாதிக்கப்பட்ட மக்கள் தலையில் உள்ள ஒட்டுமொத்த முடியையோ அல்லது பெரும்பாலான அளவிலோ இழக்கின்றனர்.
Universalis
இது மிகவும் அரிதான வகையாகும். இதில் தலை, முகம், உடல் என முழுவதுமாக உள்ள முடி கொட்டிவிடும்.
எதனால் ஆலோபீசியா ஏற்படுகிறது?
இந்த நிலையைப் பொறுத்தவரை நோய் எதிர்ப்பு மண்டலம், மனிதர்களின் மயிர்க் கால்களைத் தவறாகத் தாக்குகிறது. இதனால் வீக்கம் ஏற்படுகிறது. ஏன் இந்தத் தாக்குதல் நடக்கிறது என்று ஆய்வாளர்களால் இதுவரை கண்டறிய முடியவில்லை. ஆனால் மரபுரீதியான காரணிகளும் புறக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று கூறப்படுகிறது. இதில் மன அழுத்தமும் குறிப்பிடத்தகுந்த பங்கை வகிக்கிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு முடி கொட்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இதற்குக் குடும்பத்தினர் உட்பட ஒட்டுமொத்த சமூகமும் துணை நிற்க வேண்டும்.