Trump Vs DIA: ஈரான் அணுசக்தி மையங்கள் அழிப்பா.? ட்ரம்ப் சொன்னதை மறுக்கும் அமெரிக்க உளவுத்துறை - எது உண்மை.?
அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் கூறிய நிலையில், அதற்கு நேர்மாறான தகவலை அந்நாட்டு உளவுத்துறை கூறியுள்ளது. இதில் எது உண்மை என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது கடந்த ஞாயிறன்று அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்திய நிலையில், தங்களின் தாக்குதலில் அந்த அணுசக்தி மையங்கள் அழிக்கப்பட்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். இந்த நிலையில், அந்நாட்டு உளவுத்துறை நடத்திய ஆய்வில், மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளது. இதில் எது உண்மை என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
உளவுத்துறை கூறியுள்ளது என்ன.?
அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின்(DIA) ரகசிய அறிக்கையின்படி, ஈரானின் முக்கிய யுரேனிய செறிவூட்டல் திறன்களை கொண்டுள்ள ஃபோர்டோ, நாடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹன் அணுசக்தி மையங்களில், அமெரிக்காவின் தாக்குதல் சேதங்களை மட்டுமே ஏற்படுத்தியுள்ளன, அழிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும், முக்கியமான விஷயமாக, அவற்றை சில மாதங்களிலேயே சரி செய்து, ஈரான் மீண்டும் யுரேனிய செறிவூட்டலை தொடங்கிவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மையங்களில் குறிப்பிடத்தக்க சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன என்றும், மையவிலக்குகள் பெரும்பாலும் அப்படியே இருப்பதாகவும் கூறியுள்ள பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, தாக்குதலுக்கு முன்னதாகவே ஈரான் வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாக, ஆய்வு நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் கூற்றிலிருந்து மாறுபடும் புலனாய்வு அமைப்பின் அறிக்கை
அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இந்த அறிக்கை, ட்ரம்ப் ஏற்கனவே கூறியதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலில், அணுசக்தி மையங்கள் முழுவதுமாகவும், முற்றிலும் அழிக்கப்பட்டதாக, தாக்குதலை முடித்த உடன் ஊடகம் வாயிலாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதற்காக விமானப்படை வீரர்களையும் அவர் பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில், தாக்குதலை முடித்ததிலிருந்து ஆய்வுகளை தொடங்கிய டிஐஏ, தற்போது அளித்துள்ள அறிக்கையின்படி, அமெரிக்கா 30,000 பவுண்டுகள் எடையுள்ள பங்க்கர் பஸ்டர் குண்டுகளை போட்டும், ஃபோர்டோ அணுசக்தி மையத்தில் பெரிய தாக்கம் ஏதும் ஏற்படவில்லை என்றும், வரையறுக்கப்பட்ட தற்காலிகமான சேதங்களை மட்டுமே எற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த மையம் உள்ள சுரங்கப்பாதையின் நுழைவாயில்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், ஆனால் நிலத்தடி மையவிலக்கு மண்டபங்கள் அழிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.
DIA அறிக்கையை மறுத்த ட்ரம்ப்
இதனிடையே, பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் கண்டுபிடிப்பு என்று கூறி ஊடகங்களில் வெளியான செய்தியை, கடும் வார்த்தைகளால் சாடியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.
இது குறித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அந்த செய்தி ஒரு பொய் செய்தி என்றும், வெற்றிகரமான ராணுவ தாக்குதலை இழிவுபடுத்தும செயல் இது என்று சாடியுள்ளார்.
வெள்ளை மாளிகையும் மறுப்பு
இதேபோல், இந்த தகவலை வெள்ளை மாளிகையும் மறுத்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் செயதித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வெளியிட்டுள்ள பதிவில், அந்த ஆய்வு முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.
🚨FAKE NEWS CNN STRIKES AGAIN:
— Karoline Leavitt (@PressSec) June 24, 2025
This alleged "assessment" is flat-out wrong and was classified as "top secret" but was still leaked to CNN by an anonymous, low-level loser in the intelligence community.
The leaking of this alleged assessment is a clear attempt to demean…
இது இப்படி இருக்க, தங்களது அணுசக்தி மையங்களுக்கு பெருமளவில் எந்த சேதமும் ஏற்படவில்லை, யுரேனிய செறிவூட்டல் தொடரும் என ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், தற்போது ட்ரம்ப் சொல்வது சரியா, அந்நாட்டு உளவுத்துறை சொல்வது சிரியா என்ற பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் விடை அளிப்பது.?





















