எலிகள் மூலம் புதிய வகை கொரோனா..? ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் எலிகள் மூலம் புதியவகை கொரோனா திரிபு பரவலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் எலிகள் மூலம் புதியவகை கொரோனா திரிபு பரவலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நியூயார்க் நகரில் 8 மில்லியன் எலிகள் இருக்கின்றன. இவை குறித்து அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மைக்ரோபயாலஜி ஆய்வு செய்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி நியூயார்க் நகர எலிகள் மூலம் மூன்றுவிதமான கொரோனா திரிபுகள் உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்த நகரின் எலிகளை சோதனை செய்தபோது அவற்றின் உடலில் ஆல்ஃபா, டெல்டா, ஓமிக்ரான் வகை கொரோனா திரிபுகள் இருப்பது தெரியவந்தது. 79 எலிகளில் 13 எலிகளுக்கு SARS-CoV-2 பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. ப்ரூக்ளின் பகுதியிலேயே இந்த எலிகளின் பாதிப்பு அதிகம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்திய டாக்டர் ஹென்ரி வான் கூறுகையில், எங்களைப் பொறுத்தவரையில் எலிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்பதற்கான முதல் உறுதியான ஆதாரத்தைக் கொடுத்த ஆய்வு இதுதான் என்றார். நியூயார்க் நகரில் உள்ள எலிகள் பலவும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதால் இது விரைவில் வெவ்வேறு திரிபுகளாக மாறலாம் என்றும் அது மனிதர்களுக்குப் பரவினால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்.
ஆனால் அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கண்காணிப்பு மையம், விலங்குகளிடமிருந்து கொரோனா திரிபு மனிதர்களுக்குப் பரவுவது மிகமிக அரிது என்று ஆறுதல் தரும் செய்தியைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா:
இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரொனா தொற்று பாதிப்பு என்பது மிகவும் குறைவாக இருந்தது. சீனா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தொற்று பாதிப்பு சதவீதம் என்பது குறைவாகவே இருந்தது. சீனாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. மேலும் உயிரிழப்பும் அதிகமாக பதிவானது. இருப்பினும் சீனாவில் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக சீரோ கோவிட் பாலிஸி கைவிடப்பட்டது. இந்த கொள்கையை தளர்த்தியதால் தொற்று பரவல் அதிகரித்தது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்படும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் எதிர்ப்புத் தன்மையைக் கடக்க வைரஸ்களுக்கு ஆற்றல் உண்டாகச் சிறிய வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
ஒமிக்ரான் வேரியண்ட்:
இதனால் வைரஸ் உருமாற்றம் மற்றும் தொற்று பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டாலும் பிற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு நான்கு முதல் ஐந்து சதவீதம் அதிகம் என அவர் கூறியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் பரவியதை அடுத்து அந்த வைரஸின் பல பிறழ்ந்த பதிப்புகளை உலகம் கண்டுள்ளது; அதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகம் பெருகிவரும் ஓமைக்ரான் வகையின் XBB.1.5 வேரியண்ட அதன் மிகச் சமீபத்திய மாறுபாடாகும்.
இவை ஒருபுறம் இருக்க இந்தியாவில் தற்போது எச்3என்2 வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எச்1என்1 வைரஸின் மாறுபாடே இந்த வைரஸ் என கூறியுள்ளனர். காய்ச்சல், சளி, இருமல், ஆகிய அறிகுறிகள் தென்படும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக இணை நோயாளிகள் மற்றும் முதியவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுருத்தியுள்ளனர். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டயம் முகக்கவசம் அணிய வேண்டும் அதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.