இமயமலையில் மாயமான அமெரிக்க மலையேற்ற வீராங்கனை..! 2 நாட்களுக்கு பிறகு நடந்த சோகம்..
நேபாளம் சிகரத்தில் மாயமாகிய அமெரிக்க மலையேற்ற வீராங்கனை ஹிலாரி நெல்சன் இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டதால் மக்கள் சோகம் அடைந்துள்ளனர்.
உலகின் மிகவும் பிரபலமான பனிமலைகளில் மலையேறும் வீராங்கனையாக வலம் வந்தவர் ஹிலாரி நெல்சன். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் சாகசப் பயணங்கள் மேற்கொள்ள நினைப்பவர்கள் பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் இமயமலையில் தனது சாகசத்தை மேற்கொள்வதற்காக இந்தியா வந்திருந்தார். இங்கிருந்து நேபாளம் சென்றார்.
நேபாளத்தில் உள்ள மிகப்பெரிய சிகரமும், உலகின் மிகவும் உயரமான சிகரங்களில் எட்டாவது இடத்தில் உள்ள மிகப்பெரிய மலைப்பிரதேசமான மனசுலா சிகரத்தில் ஏறுவதற்காக சென்றிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹிலாரி நெல்சன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த சிகரத்தில் இருந்து தவறி விழுந்து மாயமானார்.
ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாததால் அவருடன் வந்த ஜிம் மோரிசன் மிகுந்த கவலை அடைந்தார். ஹெலிகாப்டர் உதவியுடன் மாயமான ஹிலாரி நெல்சனைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று காலை அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, நேபாளத்தின் சங்ரி முகாமிற்கு ஹிலாரி நெல்சனின் உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர், அங்கிருந்து அவரது உடல் காத்மாண்டுவிற்கு கொண்டு செல்லபட உள்ளது.
49 வயதான ஹிலாரி நெல்சன் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வீராங்கனையாக வலம் வந்தவர். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் மற்றும் அதன் அருகே உள்ள லோட்சே சிகரம் இரண்டையும் 24 மணி நேரத்திற்குள் ஏறிச் சென்ற முதல் பெண் என்ற அரிய சாதனையை தன் வசம் கொண்டிருப்பவர். மேலும், தேசிய புவியியல் சாதனையாளர் என்ற விருதையும் ஹிலாரி நெல்சன் பெற்றுள்ளார்.
உயிரிழந்த ஹிலாரி நெல்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கடந்த வாரம் பதிவிட்ட பதிவில், தன்னுடைய அடுத்த மலையேற்ற பயணம் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும் என்றும், இடைவிடாத மழை மற்றும் ஆபத்தான சூழல் காரணமாக சாகசங்கள் நிறைந்ததாக இருக்கும் என்றும் பதிவிட்டிருந்தார். இந்த சூழலில், மாயமான ஹிலாரி நெல்சன் சடலமாக மீட்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் சக மலையேற்ற வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் மாயமானதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பலரும் அவர் நல்ல படியாக திரும்பி வர பிரார்த்திப்பதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Jupiter : 59 ஆண்டுகளுக்கு பூமிக்கு அருகில் வியாழன்.. அடுத்த 107 ஆண்டுகளுக்கு இது நடக்காது.. ஒரு சுவாரஸ்யம்..
மேலும் படிக்க : Guinness World Record: 60 நிமிடத்தில் 120 கோழிக்கால்கள் சாப்பிட்ட பெண்... கின்னஸ் புக்கில் கெத்தாக இடம்பிடித்து அசத்தல்!