Everest Climbers Fee: ஓ.. அப்ப இது ஃபிரீ இல்லையா? எவரெஸ்ட்டில் ஏறுவதற்கான கட்டணம் இத்தனை லட்சங்களா? நேபாள அரசு அதிரடி
உலகின் உயரமான மலையான எவரெஸ்டில் ஏறுவதற்கான கட்டணத்தை உயர்த்த, நேபாள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் உயரமான மலையான எவரெஸ்டில் ஏறும் வெளிநாட்டவருக்கான கட்டணத்தை உயர்த்த, நேபாள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவரெஸ்ட் சிகரம்:
உலகின் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட், இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் உள்ளது. இமய மலைத்தொடரின் ஒரு அங்கமாக உள்ள எவரெஸ்ட் சிகரம், கடல் மட்டத்தில் இருந்து 29,000 அடி உயரத்தில் இருப்பதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், மலையேற்றத்தில் ஆர்வமுள்ள ஏராளமானோர், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் நேபாள நாட்டில் குவிகின்றனர். அந்நாட்டின் சுற்றுலாதுறை மூலம் வரும் முக்கிய வருவாயில் எவரெஸ்ட் சிகரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கட்டணம் உயர்வு:
மலையேற்றத்தில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு ஒருவருக்கு, தற்போது தலா 9 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது கடந்த 2015 ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்நிலையில் இந்த கட்டணத்தை வரும் 2025ம் ஆண்டு முதல், 12.30 லட்சம் ரூபாயாக உயர்த்த நேபாள சுற்றுலாத் துறை அந்நாட்டு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதற்கு நேபாள அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின், வரும் 2025ம் ஆண்டு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. அதே நேரம், எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் நேபாள நாட்டை சேர்ந்ததோருக்கான கட்டணம், 75,000 ரூபாயாக தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது முதல்?
2015ம் ஆண்டிற்கு முன்பு வரை 15 பேர் கொண்ட வெளிநாட்டு குழுவினர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்றால், ஒவ்வொரு நபருக்கும் தலா 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அந்த நடைமுறை 2015ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டு, வெளிநாட்டவர் ஒவ்வொருவருக்கும் தலா 11 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது.
உடல்களை மீட்க தீவிரம்:
இதனிடையே,மலையேற்றத்தில் ஈடுபடுவோர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் போது, அவர்களின் உடல்களை மீட்க, 16 லட்சம் ரூபாய் முதல் 1.50 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருப்பதாலும், பல்வேறு சிக்கல்கள் காரணமாகவும் மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் உடல்களை மீட்காமல் தவிர்ப்பது அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த விபத்தில் உயிரிழப்போரின் உடல்களை மீட்பதை கட்டாயமாக்கும் புதிய ஒழுங்குமுறையை வகுக்கவும் நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.
தொடரும் சோகம்:
நடப்பாண்டு வசந்த காலத்தில் மட்டும் எவரெஸ்ட் மலையேற்றத்தின் போது 17 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பனிச்சரிவின் போது, நேபாளத்தை சேர்ந்த வழிகாட்டிகள் 14 பேர் உயிரிழந்தனர். 2015ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நிகழ்ந்த பனிச்சரிவால் எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்பில் இருந்த 20 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்பது சிக்கலானதாகவும், அதிக செலவை கொண்டதாகவும் உள்ளது. இதனால், பலரின் உடல்கள் மிட்கப்படாமல் போவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் தான், உயிரிழப்போரின் உடல்களை மீட்பதை கட்டாயமாக்கும் புதிய ஒழுங்குமுறையை வகுக்க நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.