மாவீரன் நெப்போலியன் நகைகள் கொள்ளை.. பாரீஸ் அருங்காட்சியகத்தில் பலே திருட்டு - அதிர்ச்சியில் பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் மாவீரன் நெப்போலியனின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

உலகின் புகழ்பெற்ற மற்றும் பழமையான அருங்காட்சியகம் லோவ்ரே அருங்காட்சியகம். ப்ரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. உலகின் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் இந்த அருங்காட்சியகத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது.
நெப்போலியன் நகைகள் கொள்ளை:
இந்த சூழலில், இந்த அருங்காட்சியகத்தில் இன்று கொள்ளை நடந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாரிஸ் மட்டுமின்றி பிரான்ஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த கொள்ளையில் பிரான்ஸ் நாட்டின் மாவீரன் மன்னர் நெப்போலியனுக்குச் சொந்தமான நெக்லஸ் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸ் நாட்டின் சில பழமையான பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொள்ளை நடந்தது எப்படி?
இந்த கொள்ளை சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் அரங்கேறியுள்ளது. கொள்ளையர்கள் இந்த அருங்காட்சியகம் கீழே நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் வழியாக ஹைட்ராலிக் ஏணி மூலமாக அருங்காட்சியகம் உள்ளே நுழைந்துள்ளனர். அங்கே அருங்காட்சியகத்தில் உள்ள அப்போலோ கேலரியின் உள்ளே நுழைந்துள்ளனர். அங்குதான் நெப்போலியனுக்குச் சொந்தமான மற்றும் நெப்போலியன் காலத்து நகைகள் இருந்தது.
French culture minister Rachida Dati confirms a robbery at the Louvre Museum in Paris.
— BPI News (@BPINewsOrg) October 19, 2025
No injuries reported, but the museum has closed for “exceptional reasons” as investigations continue.
What was stolen remains unclear. #Louvre #Paris pic.twitter.com/2Fk2vtwxn2
பின்னர், சில கருவிகள் மூலமாக கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடி சாதுர்யமாக தப்பியுள்ளனர். அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதில் நெப்போலியன் மன்னருக்குச் சொந்தமான ஒன்பது பாகங்கள் நகைகளும் அடங்கும். இந்த ஆபரணம் விலை மதிப்பில்லாதது ஆகும்.
இந்த கொள்ளை சம்பவத்தால் அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்தை காண வந்த மக்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்களிடம் உள்ள பொருட்களை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
மோனாலிசா ஓவியம்:
இந்த புகழ்பெற்ற அருங்காட்சியகத்திற்கு தினசரி 30 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இ்ந்த அருங்காட்சியகத்தில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஓவியங்கள், சிற்பங்கள் என எண்ணற்ற பொக்கிஷங்கள் இங்கு உள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு சிறப்பே மோனாலிசாவின் ஓவியமே ஆகும்.
இந்த அருங்காட்சியகத்தில் பல முறை கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. மோனாலிசாவின் ஓவியத்தையும் கொள்ளையடித்துள்ளனர். 1911ம் ஆண்டு மோனாலிசா ஓவியத்தை முன்னாள் ஊழியர் தனது ஆடையில் மறைத்து எடுத்துக்கொண்டு திருடிச்சென்றார். பின்னர், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலியில் அது மீட்கப்பட்டது.
திருடப்பட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுவிட்டது. 1983ம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்தில் நடந்த கொள்ளையே மிகவும் துணிகரமான கொள்ளையாக கருதப்படுகிறது. அந்த பொருட்கள் கடந்த 2021ம் ஆண்டே மீட்கப்பட்டது. தற்போது மோனாலிசா ஓவியம் துப்பாக்கி குண்டு துளைக்காத கண்ணாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் பாரிஸ் நகர காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். அவர்கள் கொள்ளை நடந்த இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பிரான்ஸ் நாட்டை ஆண்டவர் நெப்போலியன். மன்னர் நெப்போலியனின் வீரம் புகழ்பெற்ற மாவீரன் அலெக்சாண்டரின் வீரருக்கு இணையாக போற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





















