France Riots: மீண்டும் ஒரு ஜார்ஜ் ப்ளாய்ட் சம்பவம்.. யார் இந்த நஹெல்? பிரான்ஸை உலுக்கும் ஆப்பிரிக்க சிறுவனின் மரணம்..!
17 வயது சிறுவனை காவல்துறை சுட்டு கொன்ற சம்பவம் நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டம் வெடிக்க காரணமாக அமைந்தது.
பிரான்ஸில் நடந்து வரும் போராட்டங்கள் அந்நாட்டை உலுக்கி வருகிறது. கடந்த செவ்வாய்கிழமை, பாரிஸ் அருகே 17 வயது சிறுவனை காவல்துறை சுட்டு கொன்ற சம்பவம் நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டம் வெடிக்க காரணமாக அமைந்தது. இந்த சம்பவம், மிகப் பெரிய பேசு பொருளை உருவாக்கியுள்ளது.
விளிம்புநிலை சமூகத்தின் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் இதன் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
நடந்தது என்ன..?
வடக்கு ஆப்பிரிக்க நாட்டை பூர்வீகமாக கொண்ட நஹெல் என்ற 17 வயது சிறுவன், பிரான்ஸ் நாட்டின் பாரீசின் புறநகரப் பகுதியான நான்டெர்ரேவில் காரில் சென்றுள்ளார். அப்போது, சிறுவனின் காரை காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள், விசாரித்து கொண்டிருந்ததாகவும் திடீரென சிறுவனை துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த வழியாக சென்று கொண்டிருந்தவர் இதை வீடியோவாக எடுத்துள்ளார். அதில், காரின் ஓட்டுநரின் பக்கத்தில் இரண்டு அதிகாரிகள் நின்று கொண்டிருந்ததும், எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளாத போதிலும், அதில் ஒரு அதிகாரி டிரைவரை நோக்கி துப்பாக்கியை காட்டுவது போலும் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தை விரிவாக விவரித்துள்ள அரசு தரப்பு வழக்கறிஞர் பாஸ்கல் பிரசே, "சிறுவன் யார் மீதாவது காரை ஏற்றிவிடுவான் என்ற பயத்தில் தான் துப்பாக்கியால் சுட்டதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். அந்த அதிகாரி தனது ஆயுதத்தை பயன்படுத்தி, சட்டவிரோதமாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது. அவர் தற்போது கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார். காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்றார்.
யார் இந்த நஹெல்..?
நஹெல், வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவை பூர்வீகமாக கொண்டவர். உணவை டெலிவரி செய்யும் பணியை செய்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக, நான்டெர்ரே பைரேட்ஸ் ரக்பி அணிக்காக விளையாடி வருகிறார். இவரின் தாயார் பெயர் மௌனியா. தன்னுடைய ஒரே மகனின் மரணம் குறித்து பேசியுள்ள மெளனியா, "அரேபியர் போல் இருந்ததால் என் மகன் கொல்லப்பட்டுள்ளான். அந்த அதிகாரி சிறு குழந்தையின் அரேபிய முகத்தைப் பார்த்துள்ளார். அவரது உயிரைப் பறிக்க முற்பட்டுள்ளார்" என்றார்.
சமூகம் எவ்வளவு முற்போக்கமாக மாறினாலும் இம்மாதிரியான இனவெறி தாக்குதல்கள் தொடரத்தான் செய்கிறது. குறிப்பாக, ஐரோப்பா போன்ற முற்போக்கு நவீன சமூகத்தில் இது போன்ற சம்பவம் நடப்பது பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புகிறது.
இதேபோன்று, அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த 2020ஆம் ஆண்டு, மே மாதம் 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை, போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப்பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், பிளாய்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதன் தொடரச்சியாக, தற்போது நஹெல் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மாறுகிறதே தவிர, விளம்புநிலை மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் மட்டும் நின்றபாடில்லை. குறிப்பாக, சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை அதிகாரிகளே, இனவெறியுடன் நடந்து கொள்வது சமூக சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டதை எடுத்துரைக்கிறது.