அச்சச்சோ.. அமெரிக்காவில் ஆபீசை காலி செய்த மெட்டா, மைக்ரோசாப்ட் நிறுவனங்கள்...! என்னதான் காரணம்...?
அமெரிக்காவில் உள்ள தங்களது அலுவலகங்களை பிரபல நிறுவனங்களான மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் காலி செய்துள்ளன.
உலகெங்கும் கடந்தாண்டு இறுதி முதல் லே ஆஃப் எனப்படும் வேலையிழப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இணையதளங்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் பெருநிறுவனங்களில் இதன் தாக்கம் மிக மோசமான அளவில் ஏற்பட்டுள்ளது.
லே ஆஃப்:
பெரு நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் மற்றும் பல்வேறு பிரபல செயலிகளிலும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றனர். இதனால், உலகெங்கிலும் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள தங்களது அலுவலகங்களை காலி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சியாட்டில் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் மெட்டா நிறுவனம் சியாட்டிலில் உள்ள தங்களது அலுவலகத்தையும், மைக்ரோசாப்ட் நிறுவனம் வாஷிங்டனின் பெல்லோவில் உள்ள தங்களது அலுவலகத்தையும் காலி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அலுவலகம் காலி:
ஃபேஸ்புக் நிறுவனம் சியாட்டிலின் டவுட்டவுன் நகரில் உள்ள தங்களது ஆறு அடுக்கு மாடி அலுவலகத்தை துணை குத்தகைக்கு விடுவதை கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளதாக சியாட்டில் டைம்ஸ் நாளிதழில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வெள்ளிக்கிழமையிலே மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது வாஷிங்டனின் பெல்லோவில் உள்ள தங்களது 26 அடுக்கு சிட்டி சென்டர் பிளாசா அலுவலகத்திற்கான குத்தகை ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கும் திட்டமில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த 26 அடுக்கு மாடியுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் கையெழுத்திட்டுள்ள குத்தகை ஒப்பந்தமானது வரும் 2024 அதாவது அடுத்தாண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
உலகெங்கிலும் நடைபெற்று வரும் லே ஆஃப் காரணமாகவே பெருநிறுவனங்களான மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை காலி செய்துள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் மெட்டா நிறுவனத்தில் இருந்து 726 பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வொர்க் ப்ரம் ஹோம்:
தற்போது மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணிபுரியும் முறையை வழங்க திட்டமிட்டுள்ளனர். பெருந்தொற்று காலம் முதல் பல நாடுகளிலும் பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் எனப்படும் வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள லே ஆஃப் சிக்கல் காரணமாக முன்னணி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை பணியில் இருந்து நீக்கியும், ஊதியத்தை குறைத்தும் நடவடிக்கை எடுத்து வருவது பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.