2 மாதம் தாக்குபிடித்தார்.. பன்றி இதயத்தால் வாழ்ந்த நபர் மரணம்! காரணம் என்ன?
விர்ஜினியாவிலிருக்கும் ஒரு ஆராய்ச்சி மையத்திலிருந்து பன்றியின் இதயத்தை வாங்கி அறுவை சிகிச்சை செய்தனர்.
அமெரிக்காவின் சிகாகோ பகுதியைச் சேர்ந்த டேவிட் பென்னட்(57) கடந்த சில ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்து இவருக்கு பல முறை சிகிச்சை எடுத்தும் குணம் அடையவில்லை. இவரை சமீபத்தில் பரிசோதித்த மருத்துவர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இவருக்கு பன்றியின் இதயத்தை வைத்து அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டனர்.
இதற்காக விர்ஜினியாவிலிருக்கும் ஒரு ஆராய்ச்சி மையத்திலிருந்து பன்றியின் இதயத்தை வாங்கி அறுவை சிகிச்சை செய்தனர். 8மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு பென்னட்டுக்கு பன்றியின் இதயம் வைக்கப்பட்டது. அதன்பின்னர் மெல்ல தேறி வந்தார் அவர். அவருடைய உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் ஆகியவை சீராக உள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் இரண்டு மாதங்கள் பன்றியின் இதயத்தால் வாழ்ந்து வந்த டேவிட் உயிர் நேற்று பிரிந்தது.
டேவிட்டின் உயிரிழப்புக்கான சரியான மருத்துவ காரணத்தை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. ஆனாலும் சில நாட்களாகவே அவரது உடல்நிலையில் சிக்கல் இருந்ததாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பன்றியின் இதயம் சரியாக வேலை செய்யாமல் வேகம் குறைந்திருக்கலாம், அல்லது பன்றியின் இதயத்தால் ஏதேனும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தந்தையின் மறைவு குறித்து பேசிய டேவிட்டின் மகன், '' கடைசி நேரம் வரை போராடிய மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். தந்தை இழந்தாலும், உடலுறுப்பு பற்றாக்குறை என்ற இன்றைய நிலைக்கு என் தந்தையின் பங்களிப்பு ஒரு தொடக்கமாக இருக்கும் என்றார்.
டேவிட் மரணம் குறித்து பேசிய மருத்துவர்கள், பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்துவதென்பதே ஒரு வரலாற்று சம்பவம்தான். தூக்கமில்லாத ஒரு புதிய தேடலுக்கு கொஞ்சம் பலனும் கிடைத்தது. டேவிட் மரணம் அடைந்தாலும் இது ஒரு நம்பிக்கையின் தொடக்கமே தவிர முடிவல்ல என்றனர்.
எப்படி ?
பன்றியின் சில உடல் உறுப்புகள் கிட்டதட்ட மனிதர்களின் உடல் உறுப்புகள் போல் இருக்கும். எனினும் இதற்கு முன்பாக இந்த உடல் உறுப்பை மாற்றி அறுவை சிகிச்சை செய்யும் போது மனிதர்களின் உடம்பு அதை ஏற்காத நிலை இருந்தது. இதை தவிர்க்க பன்றியின் உடலில் சில மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பன்றியின் மரபணுவில் சில வற்றை ஜீன் எடிட்டிங் செய்து மனிதர்களின் மரபணு சிலவற்றை சேர்த்துள்ளனர். இதனால் பன்றியை உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு வைக்கும் போது அதை உடல் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்