Mark Zuckerberg: இணையத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்! பெற்றோரிடம் மனமுருகி மன்னிப்பு கேட்ட மார்க் ஜுக்கர்பெர்க்!
அமெரிக்க செனட் சபையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டார் மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க். ஜுக்கபெர்க்
தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பெரும்பாலானோர் இந்த சமூக வலைதளங்களில் பலநேரம் செலவழிக்கின்றனர். குறிப்பாக, குழந்தைள் இதற்கு அடியாகி விடுகின்றனர். இதனால், பாலியல் துன்புறுத்தல், மோசடி போன்ற பல பிரச்னைகள் தலைதூக்கி நிற்கின்றன.
சமூக வலைதளங்களால் பாதிக்கப்படும் சிறார்கள்:
கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக பாலியன் துன்புறுத்தல் அதிகரிக்கவே மெட்டா உள்ளிட்ட முன்னணி வலைதள நிறுவனங்கள் மீது பல்வேறு மாகாணங்கள் வழக்குகள் பதிவானது. இந்த நிலையில், அமெரிக்க செனட் சபையில் நேற்று குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், மெட்டா, டிக்டாக், எக்ஸ், ஸ்னாப் உள்ளிட்ட பல்வேறு வலைதள நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு செனட் சபையில் இருந்தனர். செனட் சபையில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் சமூக வலைதளங்களால் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக கண்ணீர் வடித்திருக்கின்றனர்.
பின்னர், பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான காட்சிகள் அங்கு ஒளிபரப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களது குழந்தைகளின் நிலையை எடுத்துரைத்தனர். தொடர்ந்து, வலைதளங்களை தவறாக பயன்படுத்தி வன்கொடுமையாளர்கள் குழந்தைகளுக்கு இழைக்கும் கொடுமைகள் பற்றி நடவடிக்கை எடுக்க தவறியதற்காக நிர்வாக அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. மேலும், பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி, நிம்மதியை இழந்து, சிறு வயதிலேயே தற்கொலை செய்து கொள்வது என அடுக்கடுக்கான புகார்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.
மன்னிப்பு கேட்ட மார்க் ஜுக்கர்பெர்க்:
இதனை தொடர்ந்து, அமெரிக்க செனட் நீதித்துறை குழு உறுப்பினர் ஜோஷ் ஹாவ்லி, மார்க் ஜுக்கர்பெர்க்கை நோக்கி, "உங்கள் வலைதள உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?" என்று கேட்டார். இதனை அடுத்து, திடீரென பாதிக்கப்பட்ட குடும்பங்களை நோக்கி திரும்பிய அந்நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், தனது நிறுவனத்தின் தவறுக்காக மன்னிப்பு கேட்டார்.
அவர்களிடம் மார்க் ஜுக்கர்பெர்க் பேசியதாவது, "நீங்கள் அனைவரும் அனுபவித்த கொடுமையான துன்பங்களுக்கு நான் வருந்துகிறேன். உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்கள் வேறு எவருக்கும் வரக் கூடாது. என்னை மன்னியுங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மெட்டா உறுதி பூண்டுள்ளது” என்றார்.
மேலும், இந்த கூட்டத்தில் குந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக நிறுவனங்கள் தெரிவித்ததை தொடர்ந்து, குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் லாபம் ஈட்டும் நடவடிக்கைகளை இணையதளங்கள் மேற்கொள்ள அமெரிக்க செனட் சபை நீதிக்குழு அறிவுறுத்தியது. ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்களால் சுமார் 4 மணி நேரங்களுக்கு மேலாக விசாரணை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.