"யூனிபார்ம்ல இல்ல.. சாதாரண ட்ரெஸ்லகூட இங்க இருக்கக் கூடாது" இந்திய படைகளை எச்சரித்த மாலத்தீவு அதிபர்!
சீருடை போட்டு கொண்டு மட்டும் அல்ல, சாதாரண உடையிலும் இந்திய துருப்புகள் மாலத்தீவில் இருக்கக் கூடாது என மாலத்தீவு அதிபர் எச்சரித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய - மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தவர் முகமது முய்சு.
தேர்தல்போதே, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார் முகமது முய்சு. மாலத்தீவு அதிபராக அவர் பதவியேற்ற உடனேயே, இந்திய ராணுவத்தை வெளியேற்ற உத்தரவிட்டார். முய்சுவின் பதவியேற்பு விழாவுக்கு சென்ற இந்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் இது தொடர்பான முடிவை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
பற்றி எரியும் மாலத்தீவு விவகாரம்:
இந்தியாவுக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட்ட மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற காலக்கெடு விதித்தார். மே 10ஆம் தேதிக்குள், இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என தெரிவித்தார். இதற்கு, இந்திய தரப்பில் ஒப்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு படி மேலே சென்ற மாலத்தீவு அதிபர், "சீருடை போட்டு கொண்டு மட்டும் அல்ல, சாதாரண உடையிலும் அவர்கள் (இந்திய துருப்புகள்) மாலத்தீவில் இருக்கக் கூடாது" என தெரிவித்துள்ளார். மாலத்தீவின் எய்தாஃபுஷிவில் பேசியபோது, இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விரிவாக பேசிய அவர், "இந்திய துருப்புக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதில் எனது அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதால், தவறான வதந்திகளை பரப்புபவர்கள், நிலைமையை திரிக்க முயற்சிக்கின்றனர். இவர்கள் [இந்திய ராணுவம்] வெளியேறவில்லை. தங்கள் சீருடைகளை சிவிலியன் உடையாக மாற்றிக்கொண்டு திரும்பி வருகிறார்கள். நம் உள்ளத்தில் சந்தேகத்தை உண்டாக்கி, பொய்களைப் பரப்பும் இதுபோன்ற எண்ணங்களை நாம் ஏற்படுத்தக்கூடாது.
இந்திய படைகளுக்கு மாலத்தீவு அதிபர் வார்னிங்:
வரும் மே 10 ஆம் தேதி நாட்டில் இந்தியப் படைகள் இருக்காது. சீருடையில் மட்டும் இல்லை, சிவில் உடையை அணிந்து கொண்டு இருக்காது. இந்திய ராணுவம் எந்த வகையிலும் ஆடை அணிந்து இந்த நாட்டில் வசிக்காது. இதை நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன்" என்றார்.
மாலத்தீவில் எவ்வளவு இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. மாலத்தீவில் இந்திய ராணுவத்தை குவிப்பது தொடர்பாக இரு நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட்டது பல்வேறு வதந்திகளுக்கு வழிவகுத்தது. அதேபோல, அதன் நோக்கம் குறித்து தொடர் கேள்வி எழுப்பப்பட்டு வந்துள்ளது.
மாலத்தீவுக்கு இரண்டு ஹெலிகாப்டர்களை இந்தியா நன்கொடையாக வழங்கியிருந்தது. இந்த ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவ வீரர்கள்தான் இயக்கி வந்தனர். அதேபோல, இயற்கை பேரிடரின்போது கடலில் சிக்கிய மக்களைக் காப்பாற்ற இந்திய ராணுவ வீரர்கள் பெரும் பங்காற்றினர்.