Los angeles: அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு...சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதம்...உச்சக்கட்ட பதற்றம்
கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்றி இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்துள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்றி இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் மான்டேரி பூங்காவில் சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு மேல் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
சம்பவம் நடந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. சம்பவம் நடந்த உடனேயே அந்த பகுதி காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மான்டேரி பூங்கா என்பது லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள ஒரு நகரமாகும். இது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து 7 மைல் (11 கிமீ) தொலைவில் உள்ளது.
சமீபத்தில்தான், கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில், ஆறு மாத குழந்தை, 17 வயது தாய் உள்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர். மத்திய கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.
விசாலியா நகரத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோஷன் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து அதிகாலை துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டது போன்ற சத்தம் கேட்டுள்ளது.
இதேபோல, வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்காவில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, சமீபத்தில், பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக பயங்கர ஆயுதங்களை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்தம் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. இதேபோல, 1994 இல், ரைபிள்ஸ் மற்றும் சில உயர் திறன் துப்பாகிகளை பயன்படுத்த 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் பஃபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளை இன வெறியர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.
அதே மாதம், உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 18 வயது இளைஞரால் 19 பள்ளி மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் ஜூலை 4 அணிவகுப்பில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உவால்டே படுகொலைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மீண்டும் துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவற்றை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்தகைய தடை, அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.