கருவுறுதல் விகிதம்.. மீண்டும் தென் கொரியா ரெக்கார்ட் பின்னடைவு
உலகிலேயே கருவுறுதல் விகிதம் மிகவும் குறைவாக உள்ள நாடு என்ற நிலையை மீண்டும் அடைந்துள்ளது தென் கொரியா. கடந்த முறை தனது ரெக்கார்டை இந்த முறை வீழ்த்தி இன்னும் பின் தங்கியுள்ளது.
உலகிலேயே கருவுறுதல் விகிதம் மிகவும் குறைவாக உள்ள நாடு என்ற நிலையை மீண்டும் அடைந்துள்ளது தென் கொரியா. கடந்த முறை தனது ரெக்கார்டை இந்த முறை வீழ்த்தி இன்னும் பின் தங்கியுள்ளது.
தென் கொரிய நாட்டின் மக்கள் தொகை 5.1 கோடி. தமிழ்நாட்டு மக்கள் தொகையைவிட குறைவு. நிலைமை இப்படியிருக்க அங்கு நாளுக்கு நாள் கருவுறுதல் விகிதமும் மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது.
2021 புள்ளிவிவரத்தின் படி கொரிய பெண்கள் கருவுறும் தகுதி பெற்ற காலத்தில் இருந்து தங்கள் வாழ்நாளில் பெற்றுக் கொள்ளும் குழந்தையின் எண்ணிக்கை சராசரியாக 0.81 ஆக இருக்கிறது. கடந்த ஆண்டு புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2,60,600. இது தென் கொரியாவின் மொத்த மக்கள் தொகையில் 0.5% ஆகும்.
குழந்தை பிறப்பு அபாய எண்ணை நோக்கி..
தென் கொரியாவில் பொருளாதார வளர்ச்சிக்குக் குறைவில்லை. ஆனால் மக்கள் தொகை தேய்ந்து கொண்டே இருக்கிறது. இதே நிலை நீடித்தால் 2100ல் தென் கொரியாவின் மக்கள் தொகை 53% வீழ்ந்து வெறும் 2.4 கோடி என்றளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கொரிய வங்கி ஆளுநராக பொறுப்பேற்ற ரீ சாங் யாங், அதிபராக பதவியேற்ற யூன் சுக் யியோல் ஆகியோர் முன்னர் இருக்கும் பெரும் சவாலே மக்கள் தொகையை மேம்படுத்தும் பணியாக உள்ளது.
தென் கொரியாவில் குழந்தை பிறப்பு குறைவாக இருப்பதால் நாட்டில் வேலை செய்யக் கூடிய வயதில் இருப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. தற்போது வொர்க்ஃபோர்ஸ் 37.3 சதவீதமாக இருக்கிறது. இது 2070ல் பாதியாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் வயது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2% பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஒரு கொரியப் பெண் தனது முதல் குழந்தையை 32 வயதில் பெற்றுக் கொள்கிறார். இதுவும் ஆபத்தான போக்காக கருதப்படுகிறது.
ஊக்கத் தொகை; நிதியுதவி:
இந்நிலையில் தான் தென் கொரியாவில் 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் முதல் குடிமக்கள் ஒவ்வொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் இந்தியப் பண மதிப்பில் ரூ.1.35 லட்சம் அளவுள்ள ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இது தவிர ஓராண்டுக்கு குழந்தை வளர்ப்புக்கும் நிதியுதவி தரப்படுகிறது. "தென் கொரியாவில் குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் செலவு பிடிக்கும் வேலை. அரசு கொடுக்கும் சில நூறாயிரம் வொன், எங்கள் பிரச்சனையைத் தீர்க்காது" என்று அந்நாட்டுப் பெண் ஒருவர் கூறுகிறார்.