இஸ்ரேல் காவல்துறைக்கு சீருடைகளை தயாரித்து வந்த கேரள நிறுவனம்.. பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக எடுத்த முடிவு
இஸ்ரேல் காவல்துறைக்கு சீருடைகளை தயாரித்து வந்த தனியார் நிறுவனம், அதிரடி முடிவை எடுத்துள்ளது.
கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுப்பதாகக் கூறி, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் உலகளவில் பெரும் பிரச்னையை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் சர்வதேச விதிகளை மீறும் வகையில் இருப்பதாக ஐநா குற்றம் சுமத்தியுள்ளது. அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கடந்த வாரம், காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் உலக மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது. இந்த தாக்குதலில் மட்டும் கிட்டத்தட்ட 500 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
உலக மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பிய காசா மருத்துவமனை தாக்குதல்:
இந்த நிலையில், இஸ்ரேல் காவல்துறைக்கு சீருடைகளை தயாரித்து வந்த தனியார் நிறுவனம், அதிரடி முடிவை எடுத்துள்ளது. காசாவில் அமைதி நிலவும் வரை, இஸ்ரேல் காவல்துறைக்கு சீருடைகளை தயாரிக்கும் எந்த வித புது ஆர்டர்களையும் எடுக்க போவதில்லை என அந்த தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள மரியன் அப்பேரல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், உலகம் முழுவதும் ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கூத்துபரம்பு என்ற இடத்தில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக சீருடை உற்பத்தி ஆலை ஒன்று உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல், இந்த நிறுவனம்தான், இஸ்ரேல் காவல்துறைக்கு சீருடைகளை தயாரித்து வருகிறது.
இனி, புது ஆர்டர்களை எடுக்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ள நிறுவனத்தின் உரிமையாளர் தாமஸ் ஒலிக்கல், "காசாவில் போர் நிறுத்தப்படும் வரை இஸ்ரேல் காவல்துறைக்கு புதிய ஆர்டர்கள் எதையும் எடுக்க மாட்டோம் என்ற முடிவை நிறுவனம் எடுத்துள்ளது.
கேரள நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு:
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் போலீசாருக்கு சீருடை தயாரித்து வருகிறோம். ஹமாஸ் தாக்குதலையும் பொதுமக்களை கொன்று குவிப்பதையும் ஏற்க முடியாது. அதேபோல் இஸ்ரேலின் பழிவாங்கலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை மறுப்பது, மருத்துவமனைகள் மீது குண்டுவீசுவது, அப்பாவி பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. போர் முடிந்து அமைதி நிலவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
சர்வதேச உடன்படிக்கையின்படி தற்போதுள்ள ஒப்பந்தங்களை நிறுவனம் நிறைவேற்றும். ஆனால், போர் முடியும் வரை புதிய ஆர்டர்களை ஏற்க வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். போரை நிறுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். எங்களின் முடிவால் இஸ்ரேல் படைக்கு சீருடைக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், இது ஒரு தார்மீக முடிவு. மருத்துவமனைகள் மீது வெடிகுண்டு வீசுவதை ஏற்க முடியாது" என்றார்.