இந்திய உணவுகளைக் கிண்டலடித்த அமெரிக்க எழுத்தாளர்.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் இந்திய உணவுகளின் சுவை குறித்து கிண்டல் செய்து எழுதியதற்காக, இந்திய நெட்டிசன்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டு வருகிறார்.
அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் இந்திய உணவுகளின் சுவை குறித்து கிண்டல் செய்து எழுதியதற்காக, இந்திய நெட்டிசன்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டு வருகிறார். இந்திய உணவு செஃப்கள், இந்திய நடிகைகள் முதலான பலரும் இந்த அமெரிக்க எழுத்தாளரைக் கண்டித்தும், தாக்கியும் ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
பிரபல அமெரிக்க நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட்டில், காமெடி எழுத்தாளர் ஜீன் வெய்ன்கார்டன் என்பவர், “உங்களால் என்னை இவற்றைச் சாப்பிட வைக்க முடியாது” என்ற தலைப்பில், தனக்குப் பிடிக்காத உணவு வகைகள் குறித்து தனது கருத்துகளைக் கட்டுரையாக எழுதியுள்ளார். இதில் இந்திய உணவு மீதான தனது விருப்பமின்மையைக் குறிப்பிட ஜீன், இந்திய உணவுகள் ஒரே ஒரு வாசனைப் பொருளை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
``கறிகளால் நிரம்பிய வண்டி ஒன்றில் இருந்து கழுகு தப்பித்து ஓடும் விதமாக, இந்திய உணவுகளில் கறி வகைகள் இருக்கின்றன” என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் ஜீன்.
இதுகுறித்து கடுமையான வார்த்தைகளால் ட்விட்டரில் ஜீனைச் சாடியுள்ளார் தொலைக்காட்சி தொகுப்பாளரும், சமையல் போட்டிகளின் நடுவருமான பத்மா லட்சுமி. ஜீனுக்கு இந்தியச் சமையல், சுவை முதலானவை குறித்த கல்வி தேவை எனவும், அவருக்கு The Encyclopedia of Spices and Herbs என்ற புத்தகத்தைப் பரிந்துரை செய்வதாகவும் கூறியுள்ளார் பத்மா லட்சுமி.
பத்மா லட்சுமியின் ட்வீட் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து ஆதரவைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் எழுத்தாளர் ஷிரீன் அகமது தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய நாடான பாகிஸ்தானின் சமையல் மீது எனக்குப் பெருமிதம் உண்டு. எனக்கு தென்னிந்திய உணவுகளும், வெவ்வேறு கலாச்சார உணவு வகைகளைக் கலந்து உண்பதும் பிடிக்கும். இப்படியொரு கட்டுரையை எழுதி, தனது நிறவெறியைத் தைரியமாக வெளிப்படுத்தியுள்ளார். உங்கள் அரிசிச் சோறு குண்டானதாக இருக்கட்டும்.. உங்கள் மிளகாய் மன்னிக்க முடியாத அளவுக்குக் காரமாக இருக்கட்டும், உங்கள் தேநீர் குளிர்ச்சியாகட்டும்.. உங்கள் அப்பளங்கள் மிருதுவாகட்டும்” என்று நூதனமாக விமர்சித்துள்ளார்.
இப்படியான விமர்சனங்கள் எழுந்த பிறகு, எழுத்தாளர் ஜீன் வெய்ன்கார்டன் இந்திய உணவகம் ஒன்றிற்குச் சென்று, உணவுகளைச் சாப்பிட்டு, அவற்றின் சுவை குறித்து மீண்டும் எழுதுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஜீன் இந்திய உணவகம் சென்று, உணவைச் சுவைத்த பிறகும், அது குறித்த தனது நிலைப்பாட்டில் இருந்து தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. எனினும் அவர் இந்திய உணவுகளை இழிவுபடுத்தும் நோக்கில் அவ்வாறு எழுதவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
எனினும் வாஷிங்டன் போஸ்ட் இதழ் தங்களது இணையப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த செய்தியில் மாற்றம் செய்திருப்பதாகவும், இந்திய உணவுகள் பல்வேறு வகையான குழம்புகளையும், உணவு வகைகளையும் கொண்டிருப்பதாகவும், முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த விமர்சனம் நீக்கப்பட்டு, மாற்றப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.