Japan Earthquake: ஜப்பானில் 24 மணி நேரத்தில் 155 நிலநடுக்கம்.. 13 பேர் உயிரிழப்பு! அச்சத்தில் மக்கள்!
ஹொன்ஷு தீவின் கரையோரப் பகுதியான இஷிகாவா மாகாணத்தில் உள்ள வாஜிமாவில் இடிந்து விழுந்த கட்டிடங்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மத்திய ஜப்பானின் மேற்கு கடற்கரையில் உள்ள இஷிகாவா மாகாணத்தின் நோட்டோ தீபகற்பத்திற்கு அருகே நேற்று (ஜனவரி 1) உள்ளூர் நேரப்படி மாலை 4:10 மணியளவில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக பல வீடுகள் இடிந்து விழுந்தும், சாலைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது, இதையடுத்து கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
முன்னதாக, உயர்மட்ட சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் 'சுனாமி எச்சரிக்கை' ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் கடலுக்கு அருகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி முதல் அடுத்தடுத்து சிறிய நிலநடுக்கங்கள் மத்திய ஜப்பானைத் தாக்கியுள்ளன.
நிலநடுக்கத்தின் மையம் வஜிமாவிலிருந்து கிழக்கு-வடகிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் இஷிகாவாவின் நோட்டோ பகுதியில் 37.5 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 137.2 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருந்தது. இதையடுத்து, இந்த பகுதியில் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஜப்பான் டைம்ஸ் செய்தியின்படி, நோட்டோ தீபகற்பத்தில் உள்ள நானாவோவில் 2 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக காவல்துறை தெரிவித்தனர். ஹொன்ஷு தீவின் கரையோரப் பகுதியான இஷிகாவா மாகாணத்தில் உள்ள வாஜிமாவில் இடிந்து விழுந்த கட்டிடங்களில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை ஒட்டுமொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுனாமி எச்சரிக்கை:
நிலநடுக்கம் இஷிகாவா ப்ரிஃபெக்சரில் ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் எச்சரித்த 5 மீட்டர் (16 அடி) அளவை விட குறைவாகவே ஏற்பட்டது.
ஜப்பானில் 2011 நிலநடுக்கத்திற்குப் பிறகு முதல் முறையாக நோட்டோ பகுதிக்கு பெரும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மார்ச் 2011 இல், ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் 15 மீட்டர் சுனாமி தாக்கியது. இதில், சுமார் 18,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அண்டை நாடான நிகாட்டா மற்றும் டோயாமா மாகாணங்களுக்கும் சுனாமி எச்சரிக்கையும் அதிகாரிகள் விடுத்துள்ளனர். அதன்படி, அங்கு 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
ஐந்து மாகாணங்களில் மொத்தம் 51,000 க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சுமார் 1,000 க்கு அதிகமான குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க வாஜிமாவில் உள்ள வான் தற்காப்புப் படைத் தளத்தில் (SDF) தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு பொதுமக்களுக்கு போர்வைகள், தண்ணீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல்,கிழக்கு ஜப்பான் இரயில்வே நிறுவனம் நிலநடுக்கத்தின் காரணமாக டோஹோகு, ஜோட்சு மற்றும் ஹொகுரிகு ஷிங்கன்சென் பாதைகளில் அனைத்து பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இஷிகாவா மாகாணத்திற்கும் டோக்கியோவிற்கும் இடையிலான புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜப்பான் கடலில் அமைந்துள்ள அணுமின் நிலையங்களில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என அந்நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்:
டோயாமா மற்றும் கனாசாவா நகரங்களுக்கு இடையிலான பிரதான நெடுஞ்சாலையானது பல நூறு மீட்டர் தூரத்திற்கு நிலச்சரிவால் அழிந்தது. நோட்டோ தீபகற்பம் இப்போது மாகாணத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்து, அதில் வசிக்கும் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இதுவரை பதிவான இறப்புகள் குறைவாக இருந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இப்போது பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலையில் இரவைக் கழித்து வருவதாகவும், இவர்கள் நில அதிர்வுகள் தொடர்வதால் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப பயப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
7 மணிநேரத்தில் 60 நிலநடுக்கங்கள்:
மத்திய ஜப்பானில் கடந்த சில மணி நேரங்களாக நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது. நோட்டோ பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டபோது உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி முதல் அடுத்த 24 மணிநேரத்தில் 155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களின் தீவிரமானது 3 முதல் 6.1 வரை இருந்ததாகவும், மிக சமீபத்திய நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 11:02 மணிக்கு 4.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மேலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கைவிடப்பட்ட உயர்மட்ட சுனாமி எச்சரிக்கை:
ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்ட உயர்மட்ட சுனாமி எச்சரிக்கை கைவிடப்பட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இருப்பினும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பான இடங்களில் தற்போது உள்ள கடலோரப்பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.