Gaza Israel Hamas: வீணாய் போன ட்ரம்ப்பின் முயற்சி; காசா மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் - என்ன நடக்குது.?
காசாவில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஏற்பட்ட போர்நிறுத்தம் முறிந்துள்ளது. ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, காசா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்ததில் 30 பேர் பலியாகியுள்ளனர். அங்கு என்ன நடக்கிறது.?

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு தரப்பும், அதாவது ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்கியுள்ளன. ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் கூறி, நேற்று காசா மீது கடுமையான தாக்குதல்களை நடத்த நெதன்யாகு உத்தரவிட்டதையடுத்து, அங்கு குண்டுமழை பொழிந்தது இஸ்ரேல் ராணுவம். இதனால் 30 பேர் பலியான நிலையில், இந்த தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ட்ரம்ப், ஹமாசிற்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மீண்டும் தொங்கிய சண்டை; வீணான ட்ரம்ப்பின் முயற்சி
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வந்தது. அந்த போரை முடிவுக்கு கொண்டுவர கடும் முயற்சிகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த நிலையில், ஒருவழியாக சமீபத்தில் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதற்காக ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச திட்டத்தில் சிலவற்றை ஹமாஸ் எற்காவிட்டாலும், போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு, இரு தரப்பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
காசாவில் தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள், போர் நிறுத்த விதிகளை மீறிவிட்டதாக் கூறி, கடுமையான தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று உத்தரவிட்டார்.
Following security consultations, Prime Minister Netanyahu has directed the military to immediately carry out forceful strikes in the Gaza Strip.
— Prime Minister of Israel (@IsraeliPM) October 28, 2025
இதையடுத்து, காசாவில் பல்வேறு இடங்களில் குண்டு மழை பொழிந்தது இஸ்ரேல் பாதுகாப்புப் படை. அவர்கள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு ட்ரம்ப் ஆதரவு; ஹமாசுக்கு எச்சரிக்கை
இந்நிலையில், தன்னுடைய முயற்சியால் கொண்டுவரப்பட்ட போர்நிறுத்தம் முறிந்ததை பற்றி கவலைப்படாமல், இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளர்.
ஹமாஸ் அமைப்பினர் ஒரு இஸ்ரேல் பாதுகாபுப் படை வீரரை கொன்றார்கள் என்றும், அதனால் தான் இஸ்ரேல் படையினர் திருப்பித் தாக்கினர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அவர்கள் திருப்பித் தாக்க வேண்டும் எனவும், ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பை தொடர்ந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த தாக்குதல், அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
என்ன நடந்தது.?
முன்னதாக, தெற்கு காசாவில் இஸ்ரேலிய படைகளை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. அதைத் தொடர்ந்து தான், தாக்குதல் நடத்த நெதன்யாகு உத்தரவிட்டார்.
அவர் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட சில நிமிடங்களில், பிணைக் கைதி உடலை ஒப்படைப்பதை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அறிவித்தது. இதையடுத்து, இஸ்ரேல் படைகள் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசாவில் குண்டு மழை பொழிந்தன. இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.





















