Mk Stalin Election Plan : 70% பேருக்கு மீண்டும் சீட் இல்லை.! திமுக எம்எல்ஏக்களுக்கு ஷாக்- சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்
Mk Stalin Election Plan : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுகவில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் 70% பேருக்கு மீண்டும் வாய்ப்பு இல்லையென தகவல் வெளியாகியுள்ளது.

நெருங்கும் தமிழக தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் தேதி பிப்ரவரி மாதம் மத்தியில் அறிவிக்கப்படவுள்ளது. இதனைதொடர்ந்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் களம் இறங்கியுள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு என ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு பக்கம் வேட்பாளர் தேர்வுகளையும் தொடங்கியுள்ளது. இதன் படி அதிமுக, காங்கிரஸ், பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. விரைவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது.
70% எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை
இந்த நிலையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவில் குறைந்தது 70% பேருக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட 90 சதவிகிதம் பேருக்கு 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியது. இதில் திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியோடு ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ள எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் தொடர்பாக திமுக ரகசிய சர்வே எடுத்துள்ளது. இதன் படி சுமார் 70 சதவிகிதம் பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வாய்ப்பில்லையென திமுக வட்டாரம் தெரிவித்துள்ளது.
சீனியர்களுக்கு மீண்டும் சீட்.?
பல தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் 10 ஆண்டுகளாக இருப்பதால் மக்கள் புதிய மாற்றத்தை விரும்புவதாகவும் எனவே இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் புதிய முகங்களுக்கு சான்ஸ் அளிக்க திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் பல எம்எல்ஏக்கள் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிலும் திமுகவில் பல ஆண்டுகளாக எம்எல்ஏக்களாக தொடர்பவர்களுக்கும் இந்த முறை வாய்ப்பு இல்லையெனவும் கூறப்படுகிறது.
திமுகவில் சீனியர்களாக பார்க்கப்படும் வேலூர் மாவட்டத்தில் துரைமுருகன், விருதுநகர் மாவட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர், விழுப்புரத்தில் பொன்முடி, புதுக்கோட்டை ரகுபதி ஆகியோருக்கு வாய்ப்பு இல்லையெனவும், மேலும் திமுகவின் முதன்மைசெயலாளர் கே.என். நேருவிற்கு எதிராக திருச்சியில் செயல்பட்டு வரும் இரண்டு எம்எல்ஏக்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படும் என கூறப்படுகிறது.
கோவையை கைப்பற்ற பிளான் போடும் திமுக
கோவை மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக வாஷ் அவுட் ஆன திமுக, இந்த முறை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ளது. இதற்கான பொறுப்பை செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளது. அவரும் அதிமுக-பாஜக வேட்பாளர்களை வீழ்த்தும் வகையில் களப்பணியில் சிறந்து விளங்கும் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த முறையும் தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கும் திமுக எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சி கொடுக்க காத்துள்ளது திமுக தலைமை.





















