Iran Israel: தீவிர போருக்கு தயாராகும் இஸ்ரேல், பேரழிவை கொடுப்போம் என ஈரான் எச்சரிக்கை - வாரிசுகள் ரெடி?
Iran Israel Conflict: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரான் மீது நீண்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Iran Israel Conflict: இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் இன்னும் பேரழிவு தரும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
”நீண்ட கால போருக்கு தயாராகும் இஸ்ரேல்”
ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் தங்களது இருப்பிற்கே ஆபத்து இருப்பதாக கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக இருதரப்பிலும் ஏவுகணை தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று இஸ்ரேல் ராணுவம் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையத்தை இரவோடு இரவாகத் தாக்கியதால், ஈரானுக்கு எதிரான நீண்டகாலப் போருக்கு நேதன்யாகு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் தெஹ்ரானின் மூன்று மூத்த தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால், தாக்குதல்களில் அணு ஆய்வு மையம் சேதம் அடைந்ததாகவும், ஆனால் உயிரிழப்பு ஏதும் இல்லையென்றும் ஈரான் தரப்பில் கூறப்படுகிறது.
ஈரான் எச்சரிக்கை:
இஸ்ரேலின் புதிய வான்வழி தாக்குதல் தொடர்பாக பேசிய ஈரானின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தால் இன்னும் பேரழிவு தரும் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும், "எங்கள் அமைதியான அணுசக்தி திட்டம் குறித்து நம்பிக்கையை வளர்க்க மற்றவர்களுடன் பேசவும் பணியாற்றவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் அணுசக்தி நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். இஸ்ரேல் எங்களைத் தொடர்ந்து தாக்கினால், எங்கள் பதில் இன்னும் அழிவுகரமானதாக இருக்கும்" என்று ஈரான் அதிபர் பேசியுள்ளார்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல்:
இதனிடையே, ”ஈரானுக்கு எதிரான தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பில் இஸ்ரேலுடன் அமெரிக்கா ஈடுபட்டால், தங்களது ஆயுதப்படைகள் செங்கடலில் அதன் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை குறிவைக்கும்" என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விட்டுள்ளனர். ஈரான் மீதான இச்ரேல் தாக்குதலில் தலையிடுவது குறித்து, இரண்டு வாரங்களில் முடிவு செய்யப்படும் என ட்ரம்ப் தெரிவித்த நிலையில் ஹவுதி அமைப்பின் இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது.
ஈரான் தலைமைக்கு புதிய வாரிசு?
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்ததாகக் கூறப்படும் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, தனது மரணத்திற்குப் பிறகு, மூன்று மூத்த மதகுருமார்களை வாரிசுகளாக நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதிகளுக்குப் பதிலாக புதிய ஆட்களைத் தேர்ந்தெடுக்கவும் தொடங்கியுள்ளார் என கூறப்படுகிறது. ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா மற்றும் இஸ்ரேல் - காஸா போர் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மூன்ர்றாவதாக ஒரு போர் ஏற்பட்டால் கச்சா எண்ணெய் சந்தை பெரும் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.





















