Israel Death Toll: எங்கும் மரண ஓலம்.. உச்சக்கட்ட போரால் பதற்றம்.. இஸ்ரேல் தாக்குதலால் திக்குமுக்காடிய காசா
உச்சக்கட்ட பாதுகாப்பை மீறி காசாவில் இருந்து 10க்கும் மேற்பட்ட பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் பாலஸ்தீன அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இஸ்ரேல் போரை தொடங்கியுள்ளது. இதனால், இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கிடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. காசாவில் இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இறப்பு எண்ணிக்கை எவ்வளவு?
இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 1,610 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே சமயம், இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர். காசா எல்லைப்பகுதியில் போடப்பட்டிருந்த உச்சக்கட்ட பாதுகாப்பை மீறி காசாவில் இருந்து 10க்கும் மேற்பட்ட பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடல் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த பாலஸ்தீனியர்களை படுகொலை செய்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேலியர்கள் பலரை பிணை கைதியாக பிடித்து வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் அல்-அரூரி தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள பாலஸ்தீனிய கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கு அமெரிக்க, இந்திய நாடுகள் ஆதரவு:
இஸ்ரேல் மீது ஹமாஸ் படை நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குறிப்பிடுகையில், "இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதல்களை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம்.
We unequivocally condemn the appalling attacks by Hamas terrorists against Israel. We stand in solidarity with the government and people of Israel and extend our condolences for the Israeli lives lost in these attacks.
— Secretary Antony Blinken (@SecBlinken) October 7, 2023
இஸ்ரேல் அரசாங்கத்துடனும் மக்களுடனும் நாங்கள் துணை நிற்கிறோம். இந்த தாக்குதல்களில் இழந்த இஸ்ரேலியர்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்" என பதிவிட்டுள்ளார். இதற்கு மத்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிப்பதாக பைடன் அவரிடம் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், "இஸ்ரேலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் துணை நிற்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.