Israel Palestine Unrest | பார்க்கும்.. கணிக்கும்.. தாக்கும்.. இஸ்ரேலை அரண்போல காத்து நிற்கும் அயர்ன் டோம்.!
காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை பறக்கவிடுகிறது ஹமாஸ் படை. ஆனால் இஸ்ரேல் கைவசம் இருக்கும் அயர்ன் டோம் அனைத்தையும் தடுத்து முறியடிக்கிறது. அது என்ன அயர்ன் டோம்?
உலகமே கொரோனா அச்சத்தில் துடித்துக்கொண்டிருக்க, இஸ்ரேல்-பாலஸ்தீனம் படைகளுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த இரு படைகளுக்கும் இடையே வான் வழி தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தியது. அதன்பின்னர் காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான சண்டை நீண்டகாலமாக நடந்து வந்தாலும் தற்போது மீண்டும் தலைதூக்கக் காரணம் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் ஒரு பழைமை வாய்ந்த மசூதி .
இந்த மசூதி இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. இதனால் இப்பகுதியை பாலஸ்தீனியர்கள் தங்களுடையது என்கின்றனர். அதற்கு இஸ்ரேலும் சொந்தம் கொண்டாடுகிறது. இந்தச் சூழலில் கடந்த வாரம் அல் அசா மசூதிக்கு அருகில் இருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் படைகள் 5 நாட்களாக தாக்குதல் நடத்தியது. இதில் மசூதிக்கு உள்ளேயும் படைகள் வீசிய குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடியாக ஹமாஸ் படை காசா பகுதியிலிருந்து ஏவுகணையை ஏவியது. அதற்கு பதிலடியாக மீண்டும் இஸ்ரேல் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த பதிலுக்கு பதில் தாக்குதலால் தான் காசா பகுதி பற்றி எரிகிறது. இதுவரை 119 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிலடியாக காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை பறக்கவிடுகிறது ஹமாஸ் படை. ஆனால் இஸ்ரேல் கைவசம் இருக்கும் அயர்ன் டோம் அனைத்தையும் தடுத்து முறியடிக்கிறது. அது என்ன அயர்ன் டோம்? பார்க்கலாம்.
அயர்ன் டோம் என்பது ஒரு பாதுகாப்பு கவசம் போல. அதாவது ஊருக்குள் பறந்து வரும் எதிரியின் ஏவுகனையை வானத்திலேயே அடித்து வெடிக்க வைக்கும் சக்தி கொண்டது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு அயர்ன் டோம் என்பது ஒரு குழு போல. அதில் மூன்று முக்கிய அம்சங்கள் இருக்கும்.
1.ரேடார்
2.கண்காணிக்கும் வசதி
3. ஏவுகணை தாக்குதல்
முதலில் ஊருக்குள் எதிரி நாட்டு ஏவுகணை பறந்து வருவதை ரேடார் உறுதி செய்யும். உடனடியாக கண்காணிக்கும் முறை அதை டார்கெட் செய்து தாக்குதலுக்கு தயாராகும். டார்கெட் வைத்தவுடன் ஏவுகணை பறந்து சென்று எதிரியின் ஏவுகணையை நடுவழியில் தாக்கி அழிக்கும். இதெல்லாம் அடுத்தடுத்த நிமிடங்களுக்குள் நடக்கும். பெரிய ஏவுகணைகள் மட்டுமில்லை, பறந்துவரை ட்ரோனைக் கூட டார்கெட் வைத்து தாக்கும். ஒரு அயர்ன் டோம் என்பது 20 பேட்டரிகளை கொண்டது. ஒரு பேட்டரி என்பது ஒரு ரேடார், ஒரு கண்காணிக்கு பகுதி, 20 ஏவுகணைகளை கொண்டது.
ஏவுகணை வெறும் 90கிலோ எடை கொண்டது. அதனால் எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். 4-70கிமீ தொலைவு வரை இலக்கை தாக்கி அழிக்கும். தொடர்ந்து டார்கெட் செய்து சீறிப்பாயும் ஏவுகணைகளால் இஸ்ரேலுக்குள் இலக்கை அடைய முடியாமல் பாலஸ்தீன ஏவுகணைகள் நடுவழியில் நொறுங்குகின்றன. இந்த அயர்ன் டோம் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரும், உடமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.