176 பேர் பயணித்த விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. 3 ஆண்டுக்கு பின் தீர்ப்பு.. ராணுவ தளபதிக்கு 13 ஆண்டுகள் சிறை!
176 பேர் பயணித்த உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவ வீரர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
176 பேர் பயணித்த உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவ வீரர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஐனவரி மாதம் 8 ம் தேதி ஈரானில் உள்ள கொமேனி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரனைக்கு சொந்தமான விமானத்தில் 176 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 176 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆரம்பத்தில் இதை விபத்து என அறிவித்தது ஈரான் அரசு. அதன்பிறகே உக்ரைன் விமானத்தை ஏவுகணை கொண்டு ஈரான் சுட்டு வீழ்த்தியதாக கனடா மற்றும் அமெரிக்கா தெரிவித்தது. அதில், உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பிஎஸ் 752 சுட்டு வீழ்த்தப்பட்டது. டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட விமானம் புரட்சிக் காவலர் வான் பாதுகாப்புப் பிரிவினரால் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்தனர் என தெரிவித்தது.
தொடர்ந்து, அதே ஆண்டு இந்த விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அப்போதைய ஈரான் அதிபர் ஹசன் ருஹானி ஒப்புக்கொண்டார். இது திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்றும், மனித தவறால் நடந்தது என்றும் மன்னிப்பும் கோரினார். இருப்பினும், உக்ரைன் விமானம் தாக்கப்பட்டது தொடர்பாக ஈரான் ராணுவ தளபதி உள்பட 10 பேர் மீது ஈரான் அரசு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
இந்த வழக்கானது கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் இவர்கள் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, இந்த வழக்கானது நேற்று ஈரானில் உள்ள டெஹ்ரான் உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, விமானத்தின் மீது ஏவுகணை வீச உத்தரவிட்ட ஈரான் ராணுவத்தின் வான் பாதுகாப்பு படை தளபதிக்கு 13 ஆண்டுகள் சிறையும், மற்ற 9 வீரர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறையும் விதிக்கப்பட்டது.
உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரம்:
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி, ரஷ்ய ராணுவ படை உக்ரைன் மீது படையெடுத்தது. கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் கடந்தும் இந்த போருக்கான முடிவு இன்னும் புதிராகவே உள்ளது.
இந்த போரின்போது, உக்ரைன் பெண்களை ரஷ்ய ராணுவ வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்நாட்டு ஆண்களை கொடூரமாக கொலை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், உக்ரைனின் நாட்டில் இருந்து ஏராளமாக குழந்தைகள் ரஷ்ய நாட்டுக்கு கடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
ரஷ்ய ராணுவ படையினரால் உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த குழந்தைகளை சட்ட விரோதமாக ரஷ்ய நாட்டுக்கு குடிபெயர்ந்து அழைத்து சென்றது. இதையடுத்து, இந்த போர் குற்றத்திற்கு ரஷ்யாவே பொறுப்பு என சர்வதேச நீதிமன்றம் விசாரணையில் தெரிவித்தது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ரஷ்யாவில் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவை கைது செய்ய நேற்று வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ஹோஃப்மான்ஸ்க் தெரிவிக்கையில், "சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகள் வாரண்டுகளை பிறப்பித்துள்ளனர். அவற்றை அமல்படுத்துவது சர்வதேச சமூகத்தின் கையில் இருக்கிறது. இந்த வாரண்டுகளை அமல்படுத்த நீதிமன்றத்திற்கு சொந்தமாக காவலர்கள் படை இல்லை. சர்வதேச நீதிமன்றம், ஒரு நீதிமன்றமாக தனது பணியை செய்து கைது வாரண்ட் பிறப்பித்தனர். ஆனால், அதை நிறைவேற்றுவது சர்வதேச ஒத்துழைப்பைப் சார்ந்து உள்ளது" என்று தெரிவித்தார்.