Iran USA: தப்பு பண்ணிட்டீங்க ட்ரம்ப் - கொடுக்க போறத மறக்கவே மாட்டீங்க, அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை
Iran USA Conflict: அமெரிக்காவிற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் அழிவு காத்திருப்பதாக, ஈரான் தலைவர் காமெனி எச்சரித்துள்ளார்.

Iran USA Conflict: அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை:
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் எந்த நேரத்திலும் போராக வெடிக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தான், ஈரானின் 3 அணு ஆய்வு மையங்கள் மீது அமெரிக்கா இன்று காலை வான்வெளி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் நாங்களும் கலந்துகொண்டுள்ளதாகவும், ஈரான் போர் நிறுத்த நடவடிக்கைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். இந்நிலையில் தான், அமெரிக்காவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல்?
ஈரானின் உச்சபட்ச தலைவர் காமெனியின் நெருங்கிய நண்பரால் வழிநடத்தப்படும் அரசு செய்தி தாளில், “எந்தவித தாமதமும் இன்றி உடனடியாக செயல்பட வேண்டிய எங்களது தருணம் இது. முதல் கட்டமாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்த வேண்டும், அதே நேரத்தில் அமெரிக்க, பிரிட்டிஷ், ஜெர்மன் மற்றும் ஃப்ரான்ஸ் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை மூட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காமெனியின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அவரது டெலிகிராம் கணக்கில் பழைய வீடியோ ஒன்று மீண்டும் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், “எந்தவொரு அமெரிக்க ராணுவத் தலையீடும் சந்தேகத்திற்கு இடமின்றி சரிசெய்ய முடியாத சேதத்துடன் இருக்கும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அமெரிக்கா நுழைவது [போர்] 100% அதன் சொந்த தீங்குக்குத்தான். ஈரான் சந்திக்கக்கூடிய எந்தவொரு தீங்கையும் விட அது அனுபவிக்கும் சேதம் மிக அதிகமாக இருக்கும்" என்று காமெனி எச்சரித்துள்ளார்.
ஹவுதி எச்சரிக்கை:
ஈரான் இஸ்ரேல் இடையேயான மோதலில் அமெரிக்கா தலையிட்டால், செங்கடலில் உள்ள அந்நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என, ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சி படையினர் எச்சரித்து இருந்தனர். தற்போது, அதே கருத்தையே ஈரான் அரசு ஆதரவு நாளிதழும் வலியுறுத்தியுள்ளது. இதனால், அமெரிக்காவிற்கு ஈரான் விரைவிலேயே பதிலடி தருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக ட்ரோன் தாக்குதலை தீவிரப்படுத்தவும் அந்நாடு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா நடத்திய தாக்குதல்:
ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நாடன்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள அணு ஆய்வு மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக ஃபோர்டோ பகுதியில் உள்ள பங்கர்களை அழிக்கும் வகையில், சக்தி வாய்ந்த 5 முதல் 6 B2 வகை வெடிகுண்டுகளை அமெரிக்கா வீசியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் விளைவுகள் மோசமாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, “வலிமையின் வழியாக அமைதி என்பதை ட்ரம்புடன் நானும் சேர்ந்து வலியுறுத்தி வந்தேன். முதலில் வலிமை வரும், அதன் பிறகே அமைதி வரும். ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவின் படைகள் இன்று மிகவும் வலிமையுடன் செயல்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.





















