Iran Accepts Damage: அதான பாத்தோம், பங்க்கர் பஸ்டர்னா சும்மாவா.?! சேதாரத்தை ஒப்புக்கொண்ட ஈரான் - அடுத்து என்ன.?
ஈரானின் அணுசக்தி தளங்களை அழித்துவிட்டதாக ட்ரம்ப் கூறியதை முதலில் மறுத்த ஈரான், தற்போது சேதாரம் ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. அடுத்து நடக்கப் போவது என்ன.?

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஈரானின் அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால் அதை மறுத்த ஈரான், சிறிதளவு சேதமே ஏற்பட்டதாகவும், யுரேனிய செறிவூட்டலை தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தது. ஆனால், தற்போது அமெரிக்காவின் தாக்குதலில் பெரும் சேதாரம் ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது.
சேதாரம் குறித்து ஈரான் என்ன கூறியுள்ளது.?
கடந்த ஞாயிறன்று அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் அணுசக்தி மையங்களில் மோசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் கூறியுள்ளார்.
இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், B-2 போர்விமானம் மூலம் ‘பங்க்கர் பஸ்டர்‘ குண்டுகளைக் கொண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் குறிப்பிடத்தக்க சேதாரங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். “எங்கள் அணுசக்தி தளங்களில் மோசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன, அது நிச்சயம்“ என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, தங்கள் அணுசக்தி தளங்களில் பெரிய அளவில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், தாக்குதலுக்கு முன்னதாகவே யுரேனிய செறிவூட்டலுக்கான அமைப்புகளை பத்திரமாக வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டதாகவும் ஈரான் கூறியது. மேலும், யுரேனிய செறிவூட்டலை தொடர்ந்து மேற்கொள்வோம் எனவும் உறுதியாக கூறியது.
ட்ரம்ப் மற்றும் வெள்ளை மாளிகை கூறியது என்ன.?
இதனிடையே, அணுசக்தி தளங்கள் அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு ஆய்வு அறிக்கை அளித்திருப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. அதை மறுத்த ட்ரம்ப், வெற்றிகரமான ஒரு ராணுவ தாக்குதலை இழிவுபடுத்தும் வகையில் அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் உண்மை இல்லை என்றும் கூறினார். மேலும், ஈரானின் அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் உறுதிபட தெரிவித்தார்.
இதேபோல், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரேலின் லீவிட் வெளியிட்ட பதிவில், அந்த ஆய்வு முற்றிலும் பொய்யானது என தெரிவித்திருந்தார். சரியான இலக்கின் மீது 30,000 பவுண்டுகள் எடை கொண்ட குண்டுகளை வீசினால் என்ன நடக்கும் என்பது அனைவருக்குமே தெரியும் என்றும், இந்த செய்தி, வீரத்துடன் வெற்றிகரமான தாக்குதல் நடத்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் செயல் என்றும் கூறி கண்டனம் தெரிவித்தார்.
“ஈரான் அணு ஆயுதத்திலிருந்து தொலைவாக சென்றுவிட்டது“
இதனிடையே, நேற்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, அமெரிக்காவின் தாக்குதலால், ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அணு ஆயுதத்திலிருநது ஈரான் தொலைவாக சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானின் பல அணுசந்தி தளங்களில் குறிப்பிடத்தக்க கணிசமான சேதங்கள் ஏற்படுள்ளதாகவும், அது குறித்து மேலும் ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் ரூபியோ கூறினார். அதோடு, ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை தடுப்பதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சேதங்கள் குறைவுதான் என ஊடகங்களில் வெளியான தகவலை மார்கோ ரூபியோவும் மறுத்துள்ளார். பல அமைப்புகள் உள்ளதால், ஒவ்வொருவரின் ஆய்விலும் வித்தியாசங்கள் இருக்கும் என்றும், வரும் நாட்களில் உளவுத்துறையின் மதிப்பீடுகள் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்து என்ன.?
அணுசக்தி தளங்களுக்கு பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈரானே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல், இஸ்ரேல் மற்றும் ஈரான் தாக்குதல்களை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.





















