International Yoga Day| சர்வதேச யோகா தினம்: யோகா செய்வதால் நமக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?
உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை யோகா தினமாக அறிவிக்க 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநாவிற்கு கோரிக்கை விடுத்தார். இதை 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐநா ஏற்று ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன்படி 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரியளவில் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் இம்முறையும் கொரோனா பரவல் காரணமாக பெரியளவில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. இந்த தினம் தொடர்பாக இன்று காலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில், “கொரோனாவிற்கு எதிராக உலக நாடுகள் போர் செய்து கொண்டிருக்கும் சூழலில் யோகா ஒரு நம்பிக்கை தரும் கருவி” எனக் கூறினார். மேலும் அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் சதுக்கத்திலும் பலர் யோகா செய்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர்.
Today when the entire world is fighting against #COVID19
— ANI (@ANI) June 21, 2021
pandemic, Yoga has become a ray of hope. For two years now, no public event has been organised in India or the world but enthusiasm for Yoga has not gone down: PM Narendra Modi#InternationalDayOfYoga pic.twitter.com/tWK73Rh7VH
இந்தச் சூழலில் யோகா செய்வதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் சிலவற்றை காண்போம்.
1. உடல் நெகிழும் தன்மை:
பெரும்பாலம் யோகா செய்பவர்கள் உடல் நன்றாக நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கும். யோகாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று நமது உடலில் நல்ல நெகிழும் தன்மையை அதிகரிக்கும். அத்துடன் அதிலுள்ள ஆசனங்கள் நம் உடலில் உள்ள முதுகு பிரச்னை ஆகியவற்றை குறைக்கும் வகையில் அமையும். கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நேரம் உட்கார்ந்து பணி செய்பவர்களுக்கு ஏற்படும் உடல் வலிகளை யோகாசனம் தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
2. உடல் வலிமை:
தினமும் யோகா செய்வதன்மூலம் நமது உடலின் வலிமை அதிகரிக்கும். குறிப்பாக சில யோகாசனங்கள் உடற்தகுதியை அதிகரிப்பதுடன் உடல் எடையை குறைக்கும் வகையில் அமைந்திருக்கும். அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழக ஆய்வில், 8 வாரங்கள் வரை யோகாசனம் தினமும் செய்தவர்களின் உடற்தகுதி மற்றும் வலிமை அதிகரித்தது கண்டறியப்பட்டது. அத்துடன் அவர்கள் தொடர்ந்து யோகா செய்து வந்ததால் அதிக புஷ் அப் மற்றும் சிட் அப்ஸ் அவர்களால் எடுக்க முடிந்ததும் தெரியவந்துள்ளது.
3. மன அழுத்தம்:
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்மில் பலர் மன அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வருகிறோம். இதை குறைக்கவும் யோகாசனங்கள் வழிவகை செய்கின்றன. அதாவது யோகா செய்வதன் மூலம் நம்முடைய மன சோர்வு குறைகிறது. அத்துடன் உடலுக்கும் மனதிற்கும் ஒரு புத்துணர்வு கிடைக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது. யோகா ஜெர்னல் நடத்திய ஆய்வின்படி உடலை நீட்டி செய்யும் ஆசனங்கள் மற்றும் மூச்சு தொடர்பான ஆசனங்கள் மன அழுத்தம், இரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இவை நமது இதயத்தின் செயல்பாட்டையும் அதிகரிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
4. உடல் எடை:
நம்மில் பலர் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று உடல் பருமன் பிரச்னைதான். தொடர்ச்சியாக யோகாசனங்கள் செய்யும் போது நமது உடல் எடை குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் சுகாதார ஆய்வில், 155 பவுண்ட் எடை கொண்ட மனிதர் 30 நிமிடம் யோகா செய்வதால் 149 கலோரிகள் வரை எரிக்கமுடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் 30 நிமிடங்கள் யோகா செய்வதனால் உடல் எடை விரைவாக குறையும் என்று தெரிவித்துள்ளது.
5. ஆரோக்கியமான பாலியல் வாழ்வு:
பொதுவாக நமக்கு வயது அதிகமாகும் பொது உடல்உறவில் ஈடுபடும் தன்மை மெதுவாக குறைந்து கொண்டே வரும். குறிப்பாக பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு யோகாசனங்கள் செய்வதன் மூலம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பாக ஜெர்னல் ஆஃப் செக்ஸுவல் மெடிசின் நடத்திய ஆய்வில் தினமும் யோகா செய்து வந்தால் பெண்களுக்கு உடல் உறவு பிரச்னை குறையும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்களுக்கும் உடல் உறவில் ஈடுபடும் தன்மை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இவ்வாறு யோகா செய்வதனால் நமக்கு நிறையே நன்மைகள் உண்டு. ஆகவே கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டிற்கு முடங்கி இருக்கும் போது நாம் தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் யோகா செய்வது பலனளிக்கலாம். அது நமது உடலையும் வாழ்க்கையையும் சிறப்பாக வைத்திருக்கும்.
மேலும் படிக்க: எல்லாமே மருந்து... இந்த 6 பொருளும் உங்க வீட்டு கிச்சன்ல கண்டிப்பா இருக்கணும்!