International Day of Girl Child: பெண் குழந்தைகளல்ல... தேவதைகள்! உலக பெண் குழந்தைகள் தினம் இன்று!
இந்தாண்டு "Digital generation. Our generation" என்ற கருத்தில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது
சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11ம் நாளை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.
இந்நாளில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், நிதி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு, சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் சமத்துவ இலக்குகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், இந்தாண்டு "Digital generation. Our generation" என்ற கருத்தில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 2013ம் ஆண்டு, இணைய வசதியைப் பெறுவதில் 11 சதவீதம் அளவுக்கு இருந்த பாலின இடைவெளி, 2019 இல் 17 சதவீதமாக உயர்ந்துள்ளது. வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 43 சதவீதமாக உள்ளது.இணையத் தொடர்பு வசதி என்பதைத் தாண்டி, பெண் குழந்தைகள் தங்களுக்கென்று சொந்தமாக கைபேசி போன்ற கருவிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
உலகளவில் 25 வயதிற்குட்பட்ட 200 கோடிக்கும் அதிகமான இணைய வசதி இல்லாமல் இருக்கின்றன. இதில், பெண்கள் தான் அதிகம் துண்டிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்(ஸ்டெம்) ஆகிய பாடப்பிரிவுகளில் பெண் பட்டதாரிகளின் பங்கு 15 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இந்தியாவில், இத்துறைகளின் வேலை வாய்ப்பில் பெண்களின் பங்கு மிக குறைவாக 14 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும்.
அதிகமான - நடுத்தரமான வருமானம் கொண்ட நாடுகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. உதாரணமாக, கணிதம் மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளிலும் சிறந்த விளங்கிய பெண் பட்டதாரிகள் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் பிரிவுகளில் பணிபுரியும் எண்ணிக்கை 14 சதவீதமாக உள்ளது. அதே சமயம், 26 சதவித ஆண் பட்டதாரிகள் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் பிரிவுகளில் பணி செய்து வருகின்றனர்.
உலகளவில், செயற்கை நுண்ணறிவு (AI) நிபுணர்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே பெண் பட்டதாரிகள் உள்ளனர். எதிர்கால வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டிருக்கும் இந்த துறையில் இத்தகையை பாலின இடைவெளி மிகவும் வருத்தத்திற்குறிய தகவலாகும்.
பாலியல் குற்றங்கள்:
மேலும், அநேக பெண் குழந்தைகள் பாலியல், பாலின அடிப்படையிலான தொந்தரவுகளை எதிர்கொண்டு வருகின்றனர். 2019ம் ஆண்டு கொரோனா பொது முடக்கம் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கின. அதேபோன்று, 2020ல் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் குற்றச்சாட்டு தொடர்பாக 1,28,531 புகார்கள் பெறப்பட்டதாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தெரிவித்தது.
பெரும்பாலும், அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் இத்தொந்தரவைச் செய்கிறார். ஆனால் சகபாடிகள், சகபணியாட்கள் போன்றோரிடமிருந்தும் இது வரக்கூடும். இதற்குப் பெருமளவில் பலியாகக்கூடியவர்கள் பெண்கள். அவர்கள் பொதுவாகக் குறைந்த வேதனத்தையும், குறைந்த அந்தஸ்தையும் உடைய வேலைகளில் இருப்பதுடன், அனேகமாக பிள்ளைகளது ஏக வழங்கியாக இருப்பதும் காரணமாகும் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவிகின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள்கூட, பாலியல் தொந்தரவுக்கு இரையாகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, குடும்ப வன்முறைகள் பற்றி புகார் அளிக்க, தேசிய பெண்கள் ஆணையம் 7217735372 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற உறுதி மொழியை இந்நாளில் ஏற்றுக் கொள்வோம்.
மேலும், வாசிக்க: