Russia Ukraine Crisis: கைது செய்யப்படுவாரா ரஷிய அதிபர் புதின்? உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிப்பு..!
உக்ரைனில் இருந்து குழந்தைகளை சட்ட விரோதமாக தங்கள் நாட்டுக்கு குடிபெயர்ந்து அழைத்து சென்றது ரஷியா. இந்த போர் குற்றத்திற்கு ரஷியாவே பொறுப்பு என சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அரங்கில் முக்கிய நகர்வாக சர்வதேச நீதிமன்றம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சர்வதேச நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.
போர் குற்றத்திற்கு ரஷியாவே பொறுப்பு:
உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகளை சட்ட விரோதமாக தங்கள் நாட்டுக்கு குடிபெயர்ந்து அழைத்து சென்றது ரஷியா. இந்த போர் குற்றத்திற்கு ரஷியாவே பொறுப்பு என சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேபோன்ற குற்றச்சாட்டின் பேரில் ரஷியாவில் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவை கைது செய்ய இன்று வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ஹோஃப்மான்ஸ்க், "சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகள் வாரண்டுகளை பிறப்பித்துள்ள நிலையில், அவற்றை அமல்படுத்துவது சர்வதேச சமூகத்தின் கையில் இருக்கிறது. வாரண்டுகளை அமல்படுத்த நீதிமன்றத்திற்கு சொந்தமாக போலீஸ் படை இல்லை.
சர்வதேச நீதிமன்றம், ஒரு நீதிமன்றமாக தனது பணியை செய்து வருகிறது. நீதிபதிகள் கைது வாரண்ட் பிறப்பித்தனர். ஆனால், அதை நிறைவேற்றுவது சர்வதேச ஒத்துழைப்பைப் சார்ந்து உள்ளது" என்றார்.
குழந்தை கடத்தலுக்கு புதினே காரணம்:
"உக்ரைனில் குழந்தை கடத்தல்களுக்கு புதின் என்ற தனிநபரின் குற்றமே காரணம் என நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. நேரடியாக, கூட்டாக மற்றவர்கள் மூலமாக கடத்தல் நடத்தப்பட்டதற்கு புதினே பொறுப்பு. இந்த குற்றத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளை சரியாகக் கட்டுப்படுத்தத் தவறிய பொறுப்பும் அவரையே சாரும்" என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் தொடர்பாக ஐநா ஆதரவில் விசாரணை ஒன்று நடத்தப்பட்டது. உக்ரைனில் உள்ள குடிமக்களுக்கு எதிராக ரஷிய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அந்த விசாரணை உறுதி செய்தது. அங்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சித்திரவதை, கொலைகள் உட்பட, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை ரஷியா செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக உக்ரைன் போர் நடந்து வருகிறது. இந்த விவகாரம் காரணமாக உலக நாடுகள் இரண்டு துருவங்களாக பிளவுப்பட்டுள்ளது. அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
இதில், தாங்கள் நடுநிலைமையுடன் இருப்பது போன்ற தோற்றத்தை சீன முன்னிறுத்த முயன்றபோதிலும், அது ரஷியாவுக்கு ஆதரவான போக்கையே முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
எனவே, உக்ரைன் விவகாரத்தில் சீனா எடுத்த நிலைபாட்டை மேற்குலக நாடுகள் கடுமையாக சாடி வருகின்றன. இந்த விவகாரத்தில் எந்த பக்கமும் சாயாமல் நடுநிலையுடன் இருந்து வருகிறது இந்தியா.
இதையும் படிக்க: Putin - Xi Jinping : அழைப்பு விடுத்த புதின்.. ரஷ்யாவுக்கு பறக்கவிருக்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்.. முடிவுக்கு வருகிறதா உக்ரைன் போர்?