மீன் பிடிக்கும்போது பயங்கரம்; கழுத்தில் நேராக வந்து சொருகிய ஊசிமீன்… அதிசயமாக உயிர்பிழைத்த இளைஞன்!
விரைவாக செயல்பட்டு அவரை கரைக்கு கொண்டு சேர்த்து, மருத்துவமனையில் அனுமதித்த அவரது நண்பர், புத்திசாலித்தனமான அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர்கள் பெருமை கொள்ளும் விதமாக இந்த சம்பவம் உள்ளது.
மீன்பிடித்தலை மேற்கத்திய கலாச்சாரம் ரிலாக்ஸ் செய்வதன் உருவகமாக வைத்துள்ளது. ஆனால் அவ்வளவு அமைதியான, தன்மையான ஒரு செயல் கொடூரமாக மாறியதை நினைத்து பார்க்க முடிகிறதா? இந்தோனேசிய வாலிபர் ஒருவருக்கு அப்படித்தான் நடந்துள்ளது. முஹம்மது இதுல் என்பவர் ஊசி போன்ற மூக்கைக் கொண்ட ஒரு மீனால் தாக்கப்பட்டார்.
மீன்பிடிக்கும்போது நடந்த அசம்பாவிதம்
தண்ணீரில் இருந்து குதித்த அந்த ஊசிமீன் வேகமாக வந்து கழுத்தில் சொருகிய பயங்கரமான காட்சி சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மீன் குத்தியதும், பரபரப்பாக படகில் கரைக்கு வந்த அவர், அங்கிருந்து 90 நிமிடம் பயணம் செய்து செல்லவேண்டிய மருத்துவமனைக்கு, சென்று சேர்ந்துள்ளார். ஜனவரி 2020-இல், இதுல் 16 வயதாக இருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுல் தற்போது, வியக்கத்தக்க வகையில் உயிருடன் ஆரோக்கியமாக இருக்கிறார். விரைவாக செயல்பட்டு அவரை கரைக்கு கொண்டு சேர்த்து, மருத்துவமனையில் அனுமதித்த அவரது நண்பர், புத்திசாலித்தனமான அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர்கள் பெருமை கொள்ளும்விதமாக இந்த சம்பவம் உள்ளது. அவரது கழுத்தில் குத்தி இருந்த மீனின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இந்த செய்தி மீண்டும் பேசப்படுகிறது.
கழுத்தில் சொருகிய மீன்
விபத்து நடந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு பிபிசி இந்தோனேஷியா உடனான நேர்காணலில், ”பள்ளி நண்பரான சர்தியுடன் இரவு நேர மீன்பிடி பயணமாக சென்றோம்” என்று இதுல் பகிர்ந்து கொண்டார். இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், ”சர்தியின் படகில் முதலில் புறப்பட்டு, பின்னர் வேறு படகில் மாறி சென்றதாக” கூறினார். கரையில் இருந்து 500 மீட்டர் தூரம் இருந்தபோது விளக்கை ஆன் செய்துள்ளார் இதுல். அப்போது ஒரு ஊசி மீன் திடீரென்று தண்ணீரிலிருந்து குதித்து அவர் கழுத்தில் குத்தியுள்ளது. இருட்டில் திக்கு தெரியாமல், தண்ணீரில் விழுந்ததாக அவர் குறிப்பிட்டார். மீனின் நீண்ட மெல்லிய மற்றும் கூர்மையான மூக்கு அவரது கழுத்து வழியாக அவரது கன்னத்தின் கீழ் இருந்து அவரது மண்டை ஓட்டின் அடிப்பகுதி வரை துளையிட்டு நுழைந்துள்ளது.
சமயோஜிதமாக செயல்பட்ட நண்பர்
மீன் தப்பிக்க நினைத்து வேகமாக துள்ளியுள்ளது. மேலும் அசைந்துகொண்டே இருந்தால் காயம் மோசமாகும் என்பதால் அதனை இறுகப்பற்றிக்கொண்டு இருந்துள்ளார் இதுல். அப்போது மீனை எடுப்பதற்கு சார்தியின் உதவியை நாடியுள்ளார் அதுல். ஆனால் எடுத்தால் இரத்தப்போக்கு அதிகம் ஆகும் என்று எச்சரித்து அப்படியே வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். கழுத்தில் சிக்கியிருந்த 75 செ.மீ நீளமுள்ள மீனைக் கைகளில் பிடித்துக் கொண்டு எப்படியோ நீந்திக் கரைக்கு வந்துள்ளார் இதுல். தென்கிழக்கு சுலவேசியில் உள்ள சவுத் பட்டனில் உள்ள அவர்களது கிராமத்தில் இருந்து சுமார் ஒன்றரை மணிநேரம் பயணம் செய்து செல்லும் தூரத்தில் இருந்த, பாவ்-பாவில் உள்ள மருத்துவமனைக்கு அவரது தந்தை அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
வெற்றிகரமாக காப்பாற்றிய மருத்துவ நிபுணர்கள்
சரியான உபகரணங்கள் இல்லாததால் மருத்துவர்கள் முதலில் அந்த மீனை வெட்டி அதன் தலையை மட்டும் விட்டுவிட்டு உடலை தனியே பிரித்து எடுத்துள்ளனர். பின்னர் அந்த தலையை அகற்றுவதற்காக, அவர்கள் தெற்கு சுலவேசியின் தலைநகரான மகஸ்ஸரில் உள்ள மாகாண மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். மருத்துவமனையில், ஐந்து நிபுணர்கள் கவனமாக பரிசோதித்து, ஒரு மணிநேரம் நீடித்த அறுவை சிகிச்சைக்கு பின்னர், இதுலின் கழுத்தில் இருந்து மீனின் தலையை அகற்றியுள்ளனர். இச்சம்பவத்திற்கு பின் இதுல் மீன்பிடிப்பதைக் கண்டு அஞ்சவில்லை. ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஊசிமீன்களால் ஒளியை பொறுத்துக்கொள்ள முடியாது, அதனால் தண்ணீரில் இருந்து குதிக்கும் என்று அவர் கற்றுக்கொண்டார்.