UK Racism Crime: இங்கிலாந்தில் இனவெறி; உன் நாட்டுக்கு திரும்பிப்போ என கூறி இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
இங்கிலாந்தில், இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, உங்கள் நாட்டுக்கே திரும்பிப் போ என்று கூறி, இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில், இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் மீதான இனவெறி தாக்கதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் வெஸ்ட் மிட்லெண்ட் மாகாணத்தில், ஓல்ட்பெரி பகுதியல் உள்ள பூங்காவில், இந்திய இளம் பெண் ஒருவர், இனவெறி காரணமாக இருவரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
“உங்கள் நாட்டிற்கே திரும்பிப் போ“ என கூறி பாலியல் வன்கொடுமை
இங்கிலாந்தின் ஓல்ட்பெரி நகரில், இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பூங்காவில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்(வயது 20) காலை வேளையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த இளம்பெண்ணை பின் தொடர்ந்த 2 பேர், அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், அந்த இளம்பெண்ணை இருவரும் சேர்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதோடு, இங்கிலாந்தை விட்டு வெளியேறி உனது நாட்டிற்கு போ என்றும் அந்த இளம்பெண்ணிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தனக்கு நடந்த கொடுமை குறித்து, பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்தியப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை இனவெறி காரணமாக நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தை கண்டித்துள்ள இங்கிலாந்து தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரீத் கவுர், சமீப காலமாக இனவெறி அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், இது ஒரு தீவிர வன்முறைச் செயல் எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஓல்ட்பெரியில் மட்டுமல்ல, பிரிட்டனின் எந்த பகுதியிலும், இனவெறிக்கும், பெண்கள் மீதான வன்முறைக்கும் இடமில்லை என்றம், சீக்கிய சமூகத்திற்கு நீதி கிடைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் காவல்துறையுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், வால்வர்ஹாம்டனில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு வெளியே, 3 இளைஞர்களால், வயதான இரண்டு சீக்கியர்கள் தாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இப்படி ஒரு இனவெறி சம்பவம் நடந்துள்ளது.




















