Indian Died In Sudan: பெரும் சோகம்...! சூடானில் நடக்கும் கலவரத்தில் இந்தியர் உயிரிழந்த பரிதாபம்..!
சூடானில் ராணுவத்தினரிடையே ஏற்பட்டுள்ள மோதலில், இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் இடையே ஏற்பட்டுள்ள மோதலில், இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தூதரகம் ட்வீட்:
சூடானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சூடானில் உள்ள டால் குரூப் நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய நாட்டைச் சேர்ந்த சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் நேற்று துப்பாக்கிச் சூட்டில் சிக்கி உயிரிழந்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய உயிரிழந்தவரின் குடும்பம் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடரும் பதற்றம்:
ஆயுதப்படைகள் இடையேயான மோதல் இரண்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், இருதரப்புக்கும் இடையேயான துப்பாக்கிச்சண்டையில் 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 595 பேர் படுகாயமடைந்தனர். அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் இடையேயான துப்பாக்கிச் சண்டையால் தலைநகர் கார்த்தூம் அதிர்ந்து வருகிறது. சிறிய ரக பீரங்கிகளால் இரு தரப்பும் தாக்கிக் கொள்வதால் தலைநகர் முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. தலைநகர் மட்டுமின்றி அதன் அருகே உள்ள ஓம்துர்மான், பாஹ்ரி ஆகிய நகரங்களிலும் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நிலவுகிறது. இதன் காரணமாக சூடானில் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு கலவரம் சூடான்:
ஆப்ரிக்கா நாடான சூடானில் பல ஆண்டுகளாகவே உள்நாட்டுக் கலவரம் நடந்து வருகிறது. அங்கு நீண்ட காலமாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. ஆனால் அந்தப் புரட்சிக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தபடி ஜனநாயக முறையில் ஆட்சி அமையவில்லை. மாறாக அங்கு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சியிலும் மக்கள் நிம்மதியாக இல்லை.
அங்கு வறுமையும் தண்ணீர்ப் பஞ்சமும் தலை விரித்தாடுகிறது. ஒரு சில பகுதிகளில் விவசாயம் செழிப்பாக இருக்க வேளாண் வருமானம் முழுவதும் ராணுவத்தினரால் சுரண்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எண்ணெய் வளங்கள் மூலமாக வரும் வருமானமும் மக்களுக்கு முழுசாக நலத்திட்டங்களாக சென்று சேர்வதில்லை. இப்படி நாட்டில் ஒரு ஜனநாயக ஆட்சி இல்லாத நிலையில் இன்று அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.
ராணுவம் - துணை ராணுவம் மோதல்:
சூடான் நாட்டின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான ரேபிட் ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸ் என்ற குழு இன்று ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டது. அந்தக் குழுவானது முதலில் கார்த்தோம் விமான நிலையத்தைக் கைப்பற்றியது. பின்னர் அதிபர் மாளிகையையும் கைப்பற்றியதாக அறிவித்தனர். இதனால் சூடான் முழுவதும் கலவரம் மூண்டுள்ளது. ஒருபுறம் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நடக்கிறது. இன்னொரு புறம் மக்களும் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர். சூடானில் கலவரம் மூண்டுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருக்கவும். அடுத்த அறிவிப்புகாக காத்திருக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.