பிரிட்டனில் இந்திய மாணவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர் கைது
பிரிட்டனில் ஓட்டல் ஒன்றில் இந்திய மாணவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். கைதான நபரும் இந்தியர் என்பது குரிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் ஓட்டல் ஒன்றில் இந்திய மாணவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். கைதான நபரும் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு லண்டனின் ஈஸ்ட் ஹாம் பகுதியில் உள்ளது ஹைதராபாத் வாலா பிரியாணி. இந்த உணவகத்தில் கேரளாவைச் சேர்ந்த சோனா பிஜு பகுதி நேரப் பணியாளராக இருந்தார். இவர் கிழக்கு லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் அந்த உணவகத்திற்கு இந்திய இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவரை சோனா பிஜு தான் அட்டண்ட செய்தார். அப்போது அந்த இளைஞர் திடீரென சோனாவை கத்தியால் தாக்கினர்.
அதனைத் தடுக்க ஓட்டலில் இருந்தவர்கள் முற்பட்டபோது அவர்களையும் கடுமையாகத் தாக்குவேன் என்று எச்சரித்தார். இதனால் யாரும் நெருங்க முடியவில்லை. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். இளம் பெண்ணை காயங்களுடன் மீட்ட போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்தப் பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
இதற்கிடையில் லண்டன் தேம்ஸ் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸார் அந்த இளைஞரை ஆஜர்படுத்தினர். அவரை வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருக்கு லண்டனில் நிலையான முகவரி கூட இல்லை. அவர் வீடற்றவராக இருந்துள்ளார். மாணவி சோனா பிஜு படித்துவந்த கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்பாக போலீஸாருக்கு போதிய ஒத்துழைப்பை அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஈஸ்ட் ஹாம் பகுதியில் உள்ள ஹைதராபாத் வாலா உணவகத்தில் 2 மாணவர்களுக்குள் நடந்த சம்பவம் பற்றி அறிந்தோம். இது தொடர்பாக மெட்ரோபாலிட்டன் போலீஸுக்கு தேவையான உதவியை செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
குற்றத்தில் ஈடுபட்ட நபர் குறித்து முழு விவரங்கள் தெரிந்திருந்தால் 101ல் காவல்துறையைத் தொடர்பு கொண்டு பேசலாம். அல்லது தங்கள் அடையாளம் வெளியாகாமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என விரும்பினால், 0800 555 1111 என்ற எண்ணில் க்ரைம் ஸ்டாப்பர்ஸ் தொண்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
லண்டனுக்கு படிக்கச் சென்ற மாணவி கத்திக்குத்து பெற்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பது கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் குடும்பத்தினர் தூதரக ரீதியிலான உதவிகளைக் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.