IT Companies in Trouble: ட்ரம்ப் அரசால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு சிக்கல்.? அதிர்ச்சி ரிப்போர்ட்...
அமெரிக்காவில், ட்ரம்ப் அரசு கொண்டுவந்துள்ள புதிய விசா மற்றும் குடியுரிமை கொள்கைகளால், இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் ட்ரம்ப் அரசு பொறுப்பேற்ற பின், அதன் குடியுரிமை மற்றும் விசா வழங்கும் கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றத்தால், இந்திய ஐடி நிறுவனங்கள் சில பாதிக்கும் என ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ட்ரம்ப் அரசின் புதிய கொள்கை மாற்றங்கள்
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப், அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் விசா கொள்கைகளில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். குறிப்பாக இவைகளில் கவனம் செலுத்தும் ட்ரம்ப், சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களை, அதிரடியாக திருப்பி அனுப்பி வருகிறார். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அரசு ஹெச் 1 பி விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அப்படி மாற்றங்கள் கொண்டுவரப்படும் பட்சத்தில், இந்திய ஐடி நிறுவனங்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும் என கூறப்படுகிறது.
எந்தெந்த இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு.? ஆய்வறிக்கை கூறுவது என்ன.?
இந்தியாவைச் சேர்ந்த ஐடி நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை ஆன்சைட்டிற்கு அனுப்ப, ஹெச் 1 பி விசாவையே பயன்படுத்துகின்றன. இந்நிலையில், சர்வதேச கிரெடிட் ரேட்டிங் நிறுவனமான மூடிஸ், சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹெச் 1 பி விசாவுக்கான கட்டணத்தை உயர்த்துவது, அந்த விசாவில் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கான சம்பள வரம்பை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுத்தால், இந்திய ஐடி முதலைகளான இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெக்சாவேர் போன்ற நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள், இத்துறையில் அதிக லாபம் ஈட்டுவதால், அதிகமாகும் செயல்பாட்டுச் செலவுகளை சமாளிக்கும் திறன் பெற்றுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், செலவுகளை கட்டுப்படுத்த ஐடி நிறுவனங்கள் முடிவெடுத்தால், வெளிநாட்டு ஊழியர்களின் சார்பு நிலை உருவாகி, இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
ஏனெனில், 2023-ம் ஆண்டு அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட ஹெச் 1 பி விசாக்களில், 75% விசாக்களை இந்தியர்களே பெற்றுள்ளனர். உலக அளவில், ஐடி துறையில் அதிகமாக வேலை செய்பவர்கள் இந்தியர்கள்தான். இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிலை ஏற்பட்டால், அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால், ஐடி நிறுவனங்களின் லாபம் குறையும்.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் தரவுகளின்படி, 2024 ஏப்ரல் முதல் செப்டம் வரையில் வழங்கப்பட்ட 1.3 லட்சம் ஹெச் 1 பி விசாக்களில், இந்திய நிறுவனங்கள் மட்டும் 24,766 விசாக்களை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் 8,140 விசாக்களை இன்ஃபோசிஸ் நிறுவனமும், 5,272 விசாக்களை டிசிஎஸ் நிறுவனமும், 2,953 விசாக்களை ஹெச்சிஎல் அமெரிக்கா நிறுவனமும் பெற்றுள்ளன.
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், வெளிநாட்டு நிபணர்களை தற்காலிகமாக பணியமர்த்திக்கொள்ள உதவும் இந்த ஹெச் 1 பி விசாக்களை தொடர்ந்து அதிகமாக பெற்றுவருவது இந்திய நிறுவனங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

