Mark Zuckerberg; இந்தியாவை அவமதித்தாரா மார்க் ஜூக்கர்பெர்க்; சம்மன் அனுப்பும் மத்திய அரசு
2024-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேர்தல்கள் குறித்த தவறான கருத்துக்களை தெரிவித்து இந்தியாவிற்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாக மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டம்.
2024 இந்திய தேர்தல்கள் குறித்து தவறான பேச்சு
மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், சமீபத்தில் ஜோ ரோகனின் போட்காஸ்ட்டில் பேசினார். அப்போது, கடந்த ஆண்டு தேர்தல்களின் ஆண்டாக அமைந்ததாகவும், இந்தியா உட்பட உலகம் முழுவதும் தேர்தல்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார். அதோடு, இந்தியாவில் நடைபெற்ற தேர்தலிப்போது, கொரோனா பெருந்தொற்றிற்குப் பிறகு, நிலைமையை சமாளிக்க முடியாமல் மக்களிடம் எதிர்ப்பை பெற்ற பாஜக கூட்டணி உள்பட பெரும்பாலான ஆளும் கட்சிகள் தோல்வியை சந்தித்ததாக தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் கடும் எதிர்ப்பு
மார்க் ஜூக்கர்பெர்க்கின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்திற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அவரது கருத்து தவறானது என்றும், 80 கோடி மக்களுக்கு இலவச உணவு மற்றும் இலவச தடுப்பூசிகள் வழங்கியது, கொரோனா காலத்தில் பல உலக நாடுகளுக்கு உதவி, வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக இந்தியாவை வழிநடத்தியது வரை, பிரதமர் மோடியின் 3-வது பதவிக்கால வெற்றி, நல்லாட்சிக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் சாட்டி என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
மெட்டா நிறுவனத்திற்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டம்
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்த பாஜக எம்.பியும், நாடாளுமன்ற தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவருமான நிஷிகாந்த் தூபே, தவறான தகவலை தெரிவித்ததற்காக மெட்டா நிறுவனத்திடம் தனது குழு விளக்கம் கேட்கும் என தெரிவித்திருந்தார். மேலும், எந்த ஒரு ஜனநாயக நாட்டைப் பற்றிய தவறான தகவலும், அந்த நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் எனவும், இந்த தவறுக்காக, மெட்டா நிறுவனம் இந்திய நாடாளுமன்றத்திடமும், மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனால், மெட்டா நிறுவனத்திற்கு இது குறித்து சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, தெளிவாக தெரிகிறது.
இதையும் படிங்க: Happy Kaanum Pongal 2025 Wishes: குடும்பதோடு கொண்டாட காணும் பொங்கல் - நண்பர்களை எப்படி வாழ்த்தலாம்? இன்ஸ்டா ஸ்டோரி..!