"இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணுவதில் தீவிரம்" - மனம் திறந்த கனட பிரதமர் ட்ரூடோ
இந்திய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கர்கள் எங்களுடன் துணை நிற்கிறார்கள் என கனட பிரதமர் தெரிவித்துள்ளார்.
கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகள் மத்தியல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கனட நாட்டு குடிமகனை அவரது நாட்டிலேயே புகுந்து எப்படி கொல்லலாம் என கனட அரசு தொடர் கேள்விகளை எழுப்பி வருகிறது. ஆனால், கனட அரசின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்து வருகிறது. இதில், அரசியல் உள்நோக்கம் இருப்பதாக இந்தியா விமர்சித்துள்ளது.
பரபரப்பான சூழலில் இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு:
இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்து பேசியுள்ளார். டெல்லி ஜி20 உச்சி மாநாட்டில் கிடைத்த முடிவுகள் பற்றியும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே நடந்த சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் இந்திய, கனட விவகாரம் குறித்து குறிப்பிடப்படவில்லை என்றாலும் சந்திப்பின்போது, இந்த விவகாரம் குறித்து பேச்சு எழுப்பப்பட்டதாகவும் கனட அரசின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பிளிங்கன் கேட்டு கொண்டதாகவும் Associated Press செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுடன் நெருக்கமான உறவை கட்டமைப்பதில் தீவிரமாக உள்ளதாக கனட பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனட நாளிதழ் நேஷனல் போஸ்ட்-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "இந்தியா வளர்ந்து வரும் வலிமையான பொருளாதாரம். புவிசார் அரசியலில் முக்கிய நாடாக உள்ளது.
மனம் திறந்த கனட பிரதமர் ட்ரூடோ:
கடந்த ஆண்டு, வெளியிடப்பட்ட இந்தோ-பசிபிக் வியூக அறிக்கையில் நாங்கள் முன்வைத்தபடி, இந்தியாவுடன் நெருக்கமான உறவை அமைப்பதில் நாங்கள் மிகவும் தீவிரமாக இருக்கிறோம். அதே நேரத்தில், சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி புரியும் நாடு என்ற வகையில், இந்த விவகாரத்தின் முழு உண்மைகளையும் நாங்கள் பெறுவதை உறுதி செய்ய இந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
வாஷிங்டனில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்கும்போது, ஜெய்சங்கரிடம் பிளிங்கன் இந்த பிரச்னைகளை எழுப்புவார் என்று உத்தரவாதம் கிடைத்தது. கனட மண்ணில் இந்திய அரசின் ஏஜென்ட்கள், கனட குடிமகனைக் கொன்றார்கள் என்ற நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் அவர்கள் (அமெரிக்கா) ஈடுபடுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி இந்திய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கர்கள் எங்களுடன் துணை நிற்கிறார்கள். இது அனைத்து ஜனநாயக நாடுகளும், சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் அனைத்து நாடுகளும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று" என்றார்