Srilanka :சீனக்கப்பல் வருகையால் இலங்கை, இந்திய உறவில் விரிசல் ஏற்படாது - இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன.
இந்தியாவும் ,சீனாவும் எமக்கு முக்கியமான நாடுகள், எந்த நாடுகளையும் பகைத்துக்கொள்ள முடியாது என இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கிறார்.
எமக்கு இந்தியாவும் சீனாவும் முக்கியமான நாடுகள், எந்த நாடுகளையும் நாம் பகைத்துக்கொள்ள முடியாது என இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில், இரு நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாக குறிப்பிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் , இரு நாடுகளுடனும் சுமூகமான உறவை பேணியவாறு பயணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதேபோல் சீனக்கப்பல் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருவதால் இலங்கை, இந்திய உறவில் விரிசல் ஏற்படும் என வெளியாகும் செய்திகளை அடியோடு மறுப்பதாக செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் கண்காணிப்பு கப்பல் தொடர்பில் எழுந்த சர்ச்சையான கருத்துக்களையடுத்து ,இலங்கை அரசு தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சீன கப்பல் வருகைக்கு சில கட்டுப்பாடுகளை விதித்த பின்பே இலங்கை அரசு அனுமதி வழங்கியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டு இருக்கிறார். யுவான் வாங் 5 என்ற சீன கப்பல் கடந்த மாதம் சீனாவில் இருந்து இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது. அப்போது முதலே இந்த கப்பல் இந்தியா, இலங்கை, சீனா 3 நாடுகளுக்கும் இடையில் அனல் பறக்கும் விவாதமாக மாறியது. இந்தியாவின் அழுத்தத்தை தொடர்ந்து சர்வதேச எல்லையில் யுவான் வாங் 5 கப்பலை நிறுத்தி வைக்குமாறு இலங்கை சீனாவை கேட்டுக் கொண்டது.
சீனா தற்காலிகமாக அதை ஏற்றுக் கொண்டாலும் இலங்கைக்கு மிகப்பெரிய அழுத்தத்தை தந்த வண்ணமே இருந்தது. இலங்கை சீனாவிடம் இருந்து நிறைய முதலீடுகளையும் கடன்களையும் பெற்று மிகப்பெரிய அபிவிருத்தி திட்டங்களை செய்தபடி இருக்கிறது. இதனால் சீனாவின் அழுத்தத்திற்கு பணிந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் 16ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரையிலும் கப்பலை அனுமதிக்கும் முடிவை எடுத்திருக்கிறது.
இதன்படி இலங்கையிலிருந்து 500 கடல்மையில் சர்வதேச கடல் எல்லையில் நின்ற யுவான் வாங் 5 கப்பலானது 16ஆம் தேதி ஹம்மாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் வந்து நிற்கப் போகிறது.இது இந்தியாவின் ராஜதந்திரத்தின் சிறு சறுக்கல் என்று பார்க்கப்படுகிறது. சீனாவைப் பொறுத்தவரை இது கடல் வளங்களை ஆராய்ச்சி செய்யும் ஒரு ஆராய்ச்சி கப்பல் என்று சொல்லப்பட்டாலும் கூட இலங்கை ,இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளை பொறுத்தவரை இது ஆகச் சிறந்த ஒரு உளவு கப்பல். இந்த கப்பலின் மூலமாக சேட்டிலைட்டுகளின் இருப்பிடங்கள் துருப்புகளின் நிலைகள் கடலில் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கப்பல்களின் நிலைகள் என அனைத்தையும் அறிய முடியும், என்பது இந்த நாடுகளின் முக்கிய கவலையாக இருக்கிறது. இதனால் தான் இந்தியா சீன கப்பலின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
மேலும் இந்த கப்பலின் வருகைக்கான காரணம் மற்றும் யுவான் வாங் 5 கப்பல் இலங்கையின் ஹம்மாந்தோட்டை துறைமுகத்தில் இருக்கும் காலத்தில் எந்த மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட போகிறது என்ற விஷயங்களையும் இலங்கையிடம் இந்தியா கேட்டிருந்தது.
ஆனாலும் சீனாவின் அழுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து 500 மையில் தொலைவில் சர்வதேச கடலையில் இருந்த சீன கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டையை நோக்கி நகர ஆரம்பித்து இருக்கிறது. இதனிடையில் சீன கப்பலின் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தன,எங்களுக்கு இந்தியாவும் சீனாவும் மிக முக்கியமான நாடுகள். இரண்டு நாடுகளில் எந்த நாட்டையுமே நாங்கள் பகைத்துக் கொள்ள முடியாது எனவே பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறார்.
இதைப்போலவே யுவான் வாங் 5 கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் எந்த அறிவியல் ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என சீனா உறுதியளித்துள்ளது, எனவும் அந்நாட்டு பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.