Independence on August 15: ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு மட்டும் சுதந்திர தினம் இல்ல... லிஸ்ட்டை பாருங்க!
இந்தியாவை போன்றே ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்ற பிற நாடுகளின் பட்டியலை இந்த தொகுப்பில் அறியலாம்.
இந்தியா உடன் சேர்ந்து இன்னும் 5 நாடுகள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்றுள்ளன.
ஆகஸ்ட் 15ம் தேதி:
ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15ம் தேதியை, இந்தியா தனது சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறது. 76 ஆண்டுகள் பூர்த்தியடைந்து சுதந்திர இந்தியாவின் 77வது ஆண்டில் நாம் அனைவரும் தடம் பதிக்க உள்ளோம். இந்நிலையில், இந்தியா சுதந்திர தினம் கொண்டாடும் அதே ஆகஸ்ட் 15ம் தேதி, மேலும் சில நாடுகளும் சுதந்திரம் பெற்றுள்ளன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆம், அதே ஆகஸ்ட் 15ம் தேதி 5 நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றன.
01. காங்கோ குடியரசு:
ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள இந்த நாடு காங்கோ-பிராசாவில்லே என்றும் அழைக்கப்படுகிறது. முதலில் பிரெஞ்சின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்த நாடு, 1960ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. இந்த இடத்தை அண்டை நாடான காங்கோ ஜனநாயக நாட்டுடன் சிலர் குழப்பிக் கொள்வதும் உண்டு.
02. தென்கொரியா & வடகொரியா:
கொரிய தீபகற்பம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பான் ஆட்சியின் கீழ் இருந்தது. பின்பு இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஜப்பான் ஆட்சியின் கீழ் இருந்து 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கொரிய தீபகற்பம் விடுவிக்கப்பட்டது. தற்போது அது இரண்டு நாடுகளாக பிரிந்து பரபரப்பான மற்றும் குழப்பமான தென் கொரியா நாடாகவும், வடக்குப்பகுதி ரகசியமான வடகொரியா நாடகாவும் நாம் அனைவராலும் அறியப்படுகிறது.
தென் கொரியர்கள் தங்களது சுதந்திர தினத்தை 'Gwangbokjeol' என்று அழைக்கிறார்கள். அதாவது ”ஒளி திரும்பிய நாள்” என குறிப்பிடுகின்றனர். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததைக் கொண்டாடும் வகையில், பல நாடுகள் இந்தத் தேதியை 'ஜப்பான் மீதான வெற்றி நாள்' என்றும் அழைக்கின்றன.
03. பஹ்ரைன்:
ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பை பயன்படுத்தி, பிரிட்டிஷ் மற்றும் ஈரானிய கட்டுப்பாட்டில் இருந்து 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, பஹ்ரைன் மக்கள் தங்களை விடுவித்துக் கொண்டனர். இந்தியா சுதந்திரம் பெற்ற 20 ஆண்டுகளுக்குப் பிறகு தான், அந்த நாடு சுதந்திரம் பெற்றது. பாரசீக வளைகுடாவில் உள்ள இந்த சிறிய தீவு வேகமாக வளர்ந்து தற்போது, கண்களை கவரும் ஒரு சிறந்த சுற்றுலா தளமாகவும் உருவெடுத்துள்ளது. அதேநேரம், நாட்டின் முதல் அமீர் (ஆட்சியாளர்) அரியணை ஏறியம் டிசம்பர் 16ம் தேதி தான் பஹ்ரைனின் உண்மையான தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.
04. லிச்சென்ஸ்டீன்:
ஆஸ்திரியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் உள்ள ஆல்ப்ஸின் ஐரோப்பிய மலைப்பகுதியில் அமைந்துள்ள ஜெர்மன் மொழி பேசும் சிற்ய நாடு தான் லிச்சென்ஸ்டைன். ஐரோப்பாவின் மிகச்சிறிய ஆனால் பணக்கார நாடுகளில் ஒன்றான லிச்சென்ஸ்டீனுக்கு உண்மையில் சுதந்திர தினம் என்பது கிடையாது. காரணம் எந்த ஒரு சூழலிலும் யாராலும் அந்த நாடு அடிமைப்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, 1940ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 15ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு நாட்டின் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போது தலைநகர் வடுஸில் வண்ணமயமான வாணவேடிக்கைகளுடன், தெரு கண்காட்சிகள் மற்றும் ஊர்வலங்களையும் காணலாம். காரணம், ஆகஸ்ட் 15ம் தேதி அன்று தான் கிறித்துவர்கள் கடவுளாக கொண்டாடும் அன்னை மேரி சொர்கத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் லிச்சென்ஸ்டைனை ஆண்ட இளவரசர் இரண்டாவது ஃபிரான்ஸ் ஜோசப் பிறந்தது ஆகஸ்ட் 16ம் தேதி . இந்த இரண்டையும் சேர்த்து தான், ஆகஸ்ட் 15ம் தேதி லிச்சென்ஸ்டைன் நாட்டின் தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.