(Source: Poll of Polls)
இம்ரான் கானுக்கு அடுத்த அடி.. முற்றிலுமாக ஒழித்துக்கட்ட ஆளும் அரசின் பகீர் திட்டம்!
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு ஆளும் அரசாங்கம் தடை விதிக்க உள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் அந்நாட்டு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்று தந்தவர் இம்ரான்கான். கடந்த 1996ஆம் ஆண்டு தெஹ்ரீக் – இ – இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சி 2018ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, இம்ரான்கான் பாகிஸ்தான் நாட்டின் 22வது பிரதமராக பதவியேற்றார்.
அடுத்தடுத்து சவால்களை சந்திக்கும் இம்ரான் கான்: அந்த நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ம் ஆண்டு இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து விலகிய இம்ரான் கானுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. பண மோசடி வழக்கிலும் ஊழல் வழக்கிலும் சிக்கி தற்போது ராவல்பிண்டி சிறையில் உள்ளார்.
ராணுவத்தின் உதவியோடு ஆட்சி அமைத்ததாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. எந்த ராணுவத்தின் உதவியோடு ஆட்சி அமைத்தாரோ அதே ராணுவத்தின் சதியால் ஆட்சியை பறி கொடுத்ததாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அரசியல் ரீதியாக பல சவால்களுக்கு பிறகும் அவரது ஆதரவாளர்கள் பொதுத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களை கைப்பற்றினர்.
ஆளும் அரசாங்கம் போடும் பகீர் திட்டம்: ஊழல் வழக்கில் சிக்கியதால் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. அதுமட்டும் இன்றி, உட்கட்சி தேர்தலை நடத்தாத காரணத்தால் அவரது கட்சியின் சின்னமும் முடக்கப்பட்டது. இருந்தபோதிலும், அவரது ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு 93 இடங்களை கைப்பற்றினர்.
இந்த நிலையில், இம்ரான் கானுக்கு புதிய சவால் உருவாகியுள்ளது. அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவரது கட்சிக்கு பாகிஸ்தானை ஆளும் அரசாங்கம் தடை விதிக்க உள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லாஹ் தரார் கூறுகையில், "PTI (பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்)ஐ தடை செய்ய மத்திய அரசு வழக்கு தொடர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பிடிஐ கட்சியை தடை செய்யப்பட வேண்டும் என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்" என்றார். சமீபத்தில்தான், இம்ரான் கானுக்கு ஆதரவாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீரப்பு வழங்கியிருந்தது.
தேசிய மாகாண சட்டசபைகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ரிசர்வ் தொகுதிகள் பெற பிடிஐ கட்சி தகுதி பெற்றிருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதன் மூலம், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 109 எம்பிக்களோடு தனிப்பெரும் கட்சியாக இம்ரான் கானின் கட்சி உருவெடுத்துள்ளது.
பாகிஸ்தானில் தற்போது நவாஸ் ஷெரீப் - பிலாவல் பூட்டோ ஆகியோரின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளார்.