G7 Summit Japan : இன்று தொடங்கும் ஜி7 உச்சி மாநாடு... புறப்பட்ட பிரதமர் மோடி... பரபரப்பாகும் ஜப்பான்...!
ஜப்பானில் ஜி7 உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ள நிலையில், மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்.
G7 Summit Japan : ஜப்பானில் ஜி7 உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ள நிலையில், மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்.
ஜி7 உச்சி மாநாடு
முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே Group of Seven என்றழைக்கப்படும் ஜி7. இதில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நாடுகள் சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு தங்கள் சமூகம் இருப்பதாகக் கருதி ஒரு குழுவாக இணைந்துள்ளன.
ஆண்டுதோறும் இந்த மாநாடு 3 நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் இருப்பர். அந்தவகையில், இந்த ஆண்டு ஜி7 உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று முதல் மே 21ஆம் தேதி வரை ஹிரோஷிமாவில் நடைபெறும்.
யார் யார் பங்கேற்பு?
இந்த ஜி7 உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளுடன் இந்தியா, தென்கொரியா, அவுஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ், குக் தீவு ஆகிய 7 நாடுகளும் அழைப்பின்பேரில் கலந்து கொள்கின்றன.
மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹிரோஷிமாவுக்கு சென்றடைந்தார். பலத்த மழைக்கு மத்தியில் அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர் மட்டுமின்றி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கு நேற்று காலையில் ஹிரேஷிமா சென்றடைந்தார். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி நாடுகளின் தலைவர்களும் ஹிரோஷிமாவில் குவிகின்றனர். இதன் காரணமாக ஹிரோஷிமா நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் உறுப்பினராக இல்லாத சில நாடுகளுக்கு அழைப்பு விடுகப்பட்ட நிலையில், பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க இன்று காலை ஜப்பான் புறப்பட்டு சென்றார். ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் மோடி, அங்கு உலக அமைதி, நிலைத்தன்மை, நிலையான கிரகத்தின் செழிப்பு, உணவு, உரம், ஆற்றல் ஆகியவற்றை குறித்து உரையாற்ற உள்ளார்.
ஆலோசனை
இதுமட்டுமின்றி, உக்ரைன், ரஷ்யா போர், அணு ஆயுதம் பயன்பாட்டை குறைப்பது, ஏஐ என்ற செயற்கை தொழில்நுட்பம், பருவ நிலை மாற்றம், பொருளாதாரம் பாதுகாப்பு, உணவு நெருக்கடி, காலநிலை மாற்றம், சுகாதாரம் உள்ளிட்ட பலவற்றை குறித்து ஆலேசானை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, ஆசியாவில் சீனாவின் மாபெரும் வளர்ச்சி குறித்தும், சந்தையில் உலகை சீனா கட்டுப்படுத்துவது குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்படும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.
3 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்‘
ஜப்பானை தொடர்ந்து, பப்புவா நியூ கினியாவுக்கு மே 22ஆம் தேதி செல்லும் பிரதமர், அங்கு நடைபெறவிருக்கும் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் 3வது உச்சமாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர்,ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் ஆன்டனி ஆல்பனேசியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்பது குறிபிடத்தக்கது.