ஷாப்பிங் மால் வாசலில் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நத்தை ஓடுகள் கண்டுபிடிப்பு!
ஷாப்பிங் மாலின் வாசலுக்கு வெளியே உள்ள நடைபாதையில் அழகுக்காக புதைக்கப்பட்ட நத்தை ஓடுகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்துள்ளது.
ஷாப்பிங் மாலின் வாசலுக்கு வெளியே உள்ள நடைபாதையில் அழகுக்காக புதைக்கப்பட்ட நத்தை ஓடுகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய ஷாப்பிங் மால் ஒன்றுள்ளது. அந்த ஷாப்பிங் மாலின் வாயிலில் நடைபாதை ஒன்று அலங்காரமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் 70 அழகான நத்தை ஓடுகள் பதிக்கப்பட்டிருக்கும். இத்தனை ஆண்டுகளாக பலரும் அந்தப் பாதையில் நடந்து சென்றதோடு அந்த நத்தை ஓடுகளைப் பார்த்து ரசித்திருக்கின்றனர்.
ஆனால், ஒரே ஒரு பயணி அதை பார்த்துவிட்டு கடந்து செல்லவில்லை. 12 செ.மீ நீளத்தில் இருந்த கழுகுக் கண் நத்தை ஓடு அவரது கவனத்தை ஈர்த்தது. உடனே 400 மீட்டர் பரப்பளவில் பதிக்கப்பட்டிருந்த அந்த நத்தை ஓடுகள் அனைத்தையும் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்துள்ளார். அப்போது தான் அவை எல்லாமே மதிப்புமிகு, போற்றுதற்குரிய புதைபடிவங்கள் என்று கண்டுபிடித்துள்ளார்.
சுற்றுலா மாவட்டமான சியாமில், சியாம் சதுக்கத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலின் நடைபாதையில் இந்த நத்தை ஓடுகள் எப்படி பதிக்கப்பட்டன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அந்த நபர் கொடுத்த தகவலின் படி, மத்திய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மற்றும் பழங்கால பொருட்கள் ஆய்வு செய்யும் நிபுணர்களும் ஆய்வை தொடங்கியுள்ளனர். மொத்தம் 77 நத்தை ஓடுகள் உள்ளன.
இவற்றை அம்மோனைட்ஸ் எனக் கூறுகின்றனர். இவை 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினங்கள் ஆகும் என்று தாய்லாந்து நாட்டின் புதைபடிவ பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் இயக்குநர் ப்ரீச்சா சாய்தோங் கூறியுள்ளார். இந்நிலையில், உள்ளூர் ஊடகங்கள் சில வெளியிட்ட செய்தியில் இந்த நடைபாதை இரண்டாண்டுகளுக்கு முன்னர் புனரமைக்கப்பட்டது. அப்போது, இந்த ஓடுகளை பதித்திருக்கலாம். ஆனால் அவை யாரின் உத்தரவின் பேரில் பதிக்கப்பட்டது. விலை மதிப்பற்ற இந்த ஓடுகள் எப்படி கட்டுமானத் தொழிலாளர்களின் கைகளில் வந்தது என்பன பற்றித் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளன.
புதைபடிமமான சமுத்திரத்தில் வாழக்கூடிய மொலஸ்கஸ் இனத்தைச் சேர்ந்த இந்த நத்தைகள் ஜுராசிக் காலம் மற்றும் க்ரெடாசியஸ் காலத்தைச் சேர்ந்தவை. இவை பல்வேறு பிரபலமான சுற்றுலா தலங்களிலும் நினைவுப் பொருளாக விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புதைபடிவம் என்றால் என்ன?
தொல்லுயிர் எச்சம் (Fossil) அல்லது புதைபடிவம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு உயிரியலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப் பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன.
வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர். கண்டெடுக்கப்படும் தொல்லுயிர் எச்சமானது தற்காலத்தில் வாழும் உயிரினமாக இல்லாதவிடத்து அவை இன அழிவுக்குள்ளான இனமாகக் கருதப்படும்.