'இரக்கமற்ற நடத்தை' - ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கு..போலீசுக்கு 22.5 ஆண்டுகள் சிறை!
அரசு வழக்கறிஞர் தரப்பு 30 ஆண்டுகள் சிறை தண்டனை கோரிய நிலையில் தண்டனையைக் குறைத்துத் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளிப்பதற்கு முன்பு ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் குடும்பத்துக்குத் தனது இரங்கலைத் தெரிவித்தார் குற்றவாளி சாவின்.
அமெரிக்காவின் இந்த நூற்றாண்டின் பெரும் நிறவெறிக் குற்றமாகக் கருதப்படும் ஜார்ஜ் ப்ளாய்ட் மரணத்தில் குற்றவாளியான காவல் அதிகாரி டெரெக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் தண்டனை விதித்து மின்னியாபாலிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு வழக்கறிஞர் தரப்பு 30 ஆண்டுகள் சிறை தண்டனை கோரிய நிலையில் தண்டனையைக் குறைத்துத் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளிப்பதற்கு முன்பு ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் குடும்பத்துக்குத் தனது இரங்கலைத் தெரிவித்தார் குற்றவாளி சாவின்.
'இந்த சிறைத் தண்டனை உங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்கும், நம்பிக்கையைச் சிதைத்ததற்கும் முக்கியமாக ஜார்ஜ் ப்ளாய்ட்டிடம் உங்களது ஈவு இரக்கமற்ற நடத்தைக்காகவும் வழங்கப்படுகிறது’ என நீதிபதி குற்றவாளியிடம் தெரிவித்தார். மிகவும் இறுக்கமாக நிகழ்ந்து முடிந்த இந்த வழக்கின் இறுதியில் ஜார்ஜ் ப்ளாய்டின் 7 வயது மகள் பேசிய பதிவு செய்யப்பட்ட செய்தி சாவினின் அம்மாவுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் ஜார்ஜின் மகள் ‘அப்பா ஐ மிஸ் யூ , ஐ லவ் யூ’ எனச் சொல்கிறாள். அமெரிக்க சட்ட வரலாற்றில் மிகமுக்கியமான வழக்காக இந்த தீர்ப்பு கருதப்படுகிறது என ப்ளாய்டின் குடும்ப வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பதிவு செய்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,’தீர்ப்பு வழங்கப்பட்ட சூழல் எனக்குத் தெரியாது ஆனால் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது சரியான தீர்ப்புதான் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் குறித்த முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது தொடங்கியே சாவின் சிறையில்தான் உள்ளார். அவர் கொலை மற்றும் மனிதவதை செய்ததாக இரண்டு மாதங்களுக்கு முன்பு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் அந்தச் சமயம் இருந்த சாவினின் தாய் கரோலின் பாவ்லெண்ட்டி ‘எனது மகன் நல்லவன். நான் அவன் குற்றமற்றவன் என்பதை ஆழமாக நம்புகிறேன். அந்த நிலைப்பாட்டிலிருந்து நான் எக்காலத்துக்கும் மாறமாட்டேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
A Minnesota judge sentenced former police officer Derek Chauvin to 22 years and six months in prison for the murder of George Floyd during an arrest in May 2020 https://t.co/iigarALZRC pic.twitter.com/hsioUNTEy4
— Reuters (@Reuters) June 25, 2021
குற்றம் நடந்தது என்ன?
கடந்த வருடம் மே மாதம் மின்னியாபோலீஸின் ஒரு கடையில் ப்ளாய்ட் போலி 20 ரூபாய் டாலரை உபயோகித்தார் என்கிற காரணத்தைச் சொல்லி சாவின் மற்றும் அவரது இதர மூன்று காவல் அதிகாரிகள் ப்ளாய்டை கைது செய்தனர். உயிர் போகும் நிலையில் கதறும் ஜார்ஜின் முதுகில் சாவின் ஏறி நிற்கும் வீடியோவை ஒரு பெண் பதிவு செய்ய அது சர்வதேச அளவில் வைரலானது..பெருந்தொற்று காலத்திலும் ப்ளாய்ட்டின் மரணத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து சாலைகளில் போராட்டத்தில் இறங்கினார்கள் அமெரிக்க மக்கள். அமெரிக்கப் பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் கருப்புநிறப் புகைப்படம் வைத்து ஜார்ஜின் மரணத்துக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டைப் பதிவு செய்தார்கள்.
ஜார்ஜ் போதைப்பொருள் உபயோகம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால்தான் இறந்துபோனார் மற்றபடி சாவின் நல்ல போலீஸ் அதிகாரி எனத் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார் சாவினின் வழக்கறிஞர். இந்த நிலையில்தான் தற்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.